18 March 2017 0 Comments Report

தற்போது புங்குடுதீவில் நடைபெறும் “உதைபந்தாட்ட போட்டி” தொடர்பான தகவல்களும், படங்களும்… (பகுதி -1)


தற்போது புங்குடுதீவில் நடைபெறும் “உதைபந்தாட்ட போட்டி” தொடர்பான தகவல்களும், படங்களும்… (பகுதி -1)

“புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் சார்பாக புங்குடுதீவிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, விளையாட்டு வீரர்களுடன் பொதுமக்களும் பெருமளவில் பங்குபற்றி வருகின்றனர்.

மேற்படி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, “தாயகம்” அமைப்பின் நிறுவனர்களான, அமரர்கள் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களில், அமரர் திருமதி.சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களின் பிறந்த தினத்தை (19.03) முன்னிட்டு, மேற்படி விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது..

இதன்படி இன்று 18.03.2017 சனிக்கிழமை அன்று புங்குடுதீவிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் இருபத்தைந்து வயதுக்குட்பட்டோருக்கான உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்று இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்படும் கழகங்களுக்கிடையிலான, இறுதிப் போட்டி நாளை 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு (14.00) ஆரம்பமாகி நடைபெற்று கலை நிகழ்ச்சிகளுடன், பரிசளிப்பு விழாவும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

இன்று காலையில் முதலில் “தாயகம்” சமூக சேவை அகத்தின், கொடியேற்றப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் “விளையாட்டுப் போட்டிகள்” ஆரம்பமாகி உள்ளது. தாயகம் சமூக சேவை அகத்தின் தலைவி திருமதி.த.சுலோசனாம்பிகை, போஷகர் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு உலக மையத் தலைவர் திரு.பி.சதீஷ், “சன் ஸ்ரார்” விளையாட்டுக் கழக தலைவி திருமதி.சி.கலாநிதி (கலா அக்கா), தாயகம் சமூக சேவை அமைப்பின் உபசெயலாளர் செல்வி.காஞ்சனா ஆகியோரின் முன்னிலையில் “விளையாட்டுப் போட்டிகள்” ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இன்று காலையில் ஆரம்பமாகிய முதலாவது போட்டியில் “அம்பாள்” விளையாட்டுக் கழகம், “தாயகம்” விளையாட்டுக் கழகத்தை நான்குக்கு ஒன்று (4 – 1) கோல் கணக்கில் வெற்றியீட்டி, அடுத்த சுற்றுக்கு “அம்பாள்” விளையாட்டுக் கழகம் தெரிவாகி உள்ளது..

இரண்டாவது போட்டி “நிலா ஜோடி” விளையாட்டுக் கழகம், மற்றும் “சென்.சேவியர்” விளையாட்டுக் கழகங்கள் மோத இருந்தன. ஆயினும் “வோக்கர்” அடிப்படையில், “சென்.சேவியர்” விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த சுற்றுக்கு “சென்.சேவியர்” விளையாட்டுக் கழகம் தெரிவாகி உள்ளது.

மூன்றாவது போட்டியில் “ஈஸ்ரன்” விளையாட்டுக் கழகம், “ஐங்கரன்” விளையாட்டுக் கழகத்தை ஒன்றுக்கு சைபர் (1 – 0) கோல் கணக்கில் வெற்றியீட்டி, அடுத்த சுற்றுக்கு “ஈஸ்ரன்” விளையாட்டுக் கழகம் தெரிவாகி உள்ளது.

நான்காவது போட்டியில் “காந்தி” விளையாட்டுக் கழகமும், “பாரதி” விளையாட்டுக் கழகமும் மோதி, சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, “பனால்ட்டி சூட்” முறையில், “பாரதி” விளையாட்டுக் கழகம், “காந்தி” விளையாட்டுக் கழகத்தை மூன்றுக்கு இரண்டு (3 – 2) கோல் கணக்கில் வெற்றியீட்டி, அடுத்த சுற்றுக்கு “பாரதி” விளையாட்டுக் கழகம் தெரிவாகி உள்ளது.

தற்போது மதிய இடைவேளை, இதனைத் தொடர்ந்து ஏனைய கழகங்கள் (வயலூர் முருகன் விளையாட்டுக் கழகம், நண்பர்கள் விளையாட்டுக் கழகம், சன் ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம், மற்றும் ஏனைய சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன.. (அது தொடர்பான செய்திகளும், படங்களும் தொடர்சசியாக வெளிவரும்)

தகவல்…
செல்வி.ஜெகந்தினி முத்துக்குமாரு,
செயலாளர்,
தாயகம் சமூக சேவை அகம்,
புங்குடுதீவு.

இன்று மாலையில், புங்குடுதீவில் நடைபெற்ற “உதைபந்தாட்ட போட்டி” தொடர்பான தகவல்களும், படங்களும்… (பகுதி -2)

*** இந்த செய்தியில் உள்ள படங்களின் மேலே, இரண்டு முறை “கிளிக்” பண்ணி (அழுத்தி) பார்ப்பதன் மூலம், படங்களை தெளிவாகவும், பெரிதாகவும் பார்க்க முடியும்..


Post a Comment

*