;
Athirady Tamil News

எதிர்ப்பினால் உருவாகும் ‘இரும்புத்திரை 2..!!

0

இரும்புத்திரை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விஷால் நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 11ஆம் தேதி ரிலீஸான படம் இரும்புத்திரை. சமந்தா ஹீரோயினாகவும், அர்ஜுன் வில்லனாகவும் நடித்தனர். ஆக்ஷன் த்ரில்லர் படமான இது, தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. குறிப்பாக, யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படத்துக்குப் பக்கபலமாக அமைந்திருந்தது.

அபிமன்யுடு என்ற பெயரில் ஜூன் 1ஆம் தேதி தெலுங்கில் ரிலீஸாக இருக்கிறது. கடந்த வாரம் இதன் இசை வெளியீட்டு விழா, ஹைதராபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் பலர் பலியானதை முன்னிட்டு, இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.

விழா ரத்து செய்யப்பட்டதற்கான விளக்கத்தைச் சொல்வதற்கும், படத்தை புரமோஷன் செய்வதற்காகவும் ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் (மே28) கலந்து கொண்டு விஷால் பேசும் போது “என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய ஹிட் இரும்புத்திரை. இந்தப் படத்தில் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாகக் கூறி சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், தமிழ்நாட்டில் இரண்டு ஷோக்களை கேன்சல் செய்ய வேண்டியதாகிவிட்டது. மத்திய தணிக்கை வாரியத்திடமிருந்து தணிக்கைச் சான்றிதழ் பெற்ற பிறகு, எந்தப் படத்தையும் தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை” என்று கூறியதோடு இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது பற்றியும் பேசியுள்ளார்.

“இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் எனப் படம் வெளிவருவதற்கு முன்பே யோசித்துவிட்டோம். இன்னும் அதற்கான கதையை இயக்குநர் மித்ரன் எழுத வேண்டும். டெக்னாலஜி நமக்கு எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி மித்ரனிடம் பல விஷயங்கள் இருக்கின்றன. இரும்புத்திரை திரைப்படத்தில் அதை அவர் 20 சதவிகிதம் தான் தெரிவித்திருக்கிறார். இந்த காலத்திற்குத் தேவையான ஒரு படம் இரும்புத் திரை” என்று விஷால் தெரிவித்துள்ளார்.

இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து தொடக்கத்திலேயே முடிவு செய்யப்பட்டிருந்தாலும், இத்தனை சீக்கிரம் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டதன் காரணம், முதல் படத்தை ஒடுக்க நினைத்ததுதான். இணையதளத்தின் மூலம் பொய்ப் பிரச்சாரங்கள் செய்வது குறித்து அடுத்த திரைப்படத்தின் கதையை அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக இயக்குநருக்கு நெருக்கமானவர்கள் ஏற்கெனவே தகவல் வெளியிடத் தொடங்கிவிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*