;
Athirady Tamil News

பாலியல் கொடுமையைப் பேசும் குறும்படம்..!!

0

கோயம்புத்தூரைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் அஜித் அசோக், பாலியல் வன்முறைக்கு எதிரான தனது புதிய குறும்படத்தில் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி கிஸாங்கே என்ற உலகின் மிகவும் குறைவான உயரம் கொண்ட பெண்ணை நடிக்கவைத்துள்ளார்.

ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கியுள்ள அசோக் தற்போது பெருகிவரும் பாலியல் வன்முறைச் செயல்களைக் கண்டித்து ‘மாதரம்’ என்ற குறும்படத்தை இயக்கிவருகிறார். படம் குறித்து அசோக் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். “நாட்டில் பற்றி எரியும் பிரச்சினையாக உருவெடுத்திருப்பது பாலியல் வன்முறைதான். இது பற்றி நாம் பேசியாக வேண்டும். அன்றாட வாழ்க்கையில் பெண்கள் படும் கஷ்டங்களை மையப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளோம். திரைக்கதையை எழுதி முடித்த பின்பு உயரக் குறைபாடுள்ள பெண் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்தோம். இரண்டு பெண் பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் கதாபாத்திரத்திற்கு ஜோதி பொருத்தமானவராக உள்ளார்” என்று கூறியுள்ளார்.

ஜோதிக்கு தமிழ் தெரியாவிடினும் படப்பிடிப்பில் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டுள்ளார். படத்தில் பணியாற்றிய தனது அனுபவம் குறித்துக் கூறிய அவர், “இயக்குநர் மற்றும் அவரது குழு இணையம் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு பிரதான வேடத்தில் நடிக்கக் கூறினர். திரைக்கதையை அவர் விவரிக்கும்போது பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிய படமாக இருந்தது எனக்கு விருப்பமானதாக இருந்தது. வசனங்கள் பேசுவது கடினமானதாக இருந்தது. உணர்ச்சிகரமான காட்சிகளில் எப்படி உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது சவாலாக இருந்தது. ‘நான் உயரம் குறைவாக இருப்பதற்கு வருத்தப்படவில்லை. பெண்ணாக இருப்பதற்கு வருத்தப்படுகிறேன்’ என்ற வசனம் படத்தில் இடம்பெறுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே படம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கோவையில் படமாக்கப்பட்டுள்ள இந்த மூன்று நிமிடக் குறும்படம் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

அசோக் இயக்கும் மற்றொரு குறும்படத்தில் நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜாவை நடிகையாக அறிமுகம் செய்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*