;
Athirady Tamil News

விஸ்வரூபம் 2: தள்ளிப்போனதன் காரணம்..!!

0

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

2013ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையப்படுத்தி வெளிவந்த இந்தப் படத்துக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் பல தடைகள் தாண்டிப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகம் ஏற்கெனவே பாதி எடுக்கப்பட்ட நிலையில், ஆஸ்கர் ரவிச்சந்திரனுடனான பிரச்சினையால் விஸ்வரூபம் 2 கிடப்பில் போடப்பட்டது. பின்னர் அந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டுப் படமும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது.

முதல் பாகத்தில் கமலுடன் நடித்த பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் இரண்டாம் பாகத்தில் தொடர்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சென்சாரில் படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்துவருகின்றன.

இந்த நிலையில் விஸ்வரூபம் 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவிருப்பதாகத் தகவல் வெளியானது. இது சம்பந்தமாகப் படக் குழுவினருடன் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது, “ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடுவதாக இருந்தோம். அந்த நேரத்தில் திரைப்பட ஸ்டிரைக் காரணமாகத் தள்ளிப்போனது. அதனால், ‘இருக்கும் நேரத்தை வீணடிக்காமல் இன்னும் கொஞ்சம் சி.ஜி. வொர்க் பண்ணுங்க. அதை முழுமையாக்குங்க’ என்று கமல் சார் கூறினார். அதை எல்லாம் சரியாகி ரிலீஸுக்கு தயாரானபோது, காலா ஜூனில் வருகிறது. இதற்கடுத்து ஜூலையில் வைக்கலாம் என்று பார்த்தால் பிக் பாஸ் 2 வருகிறது. அந்த நேரத்தில் அந்த நிகழ்ச்சி உச்சத்தில் இருக்கும்போது வெளியிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்” என்றனர்.

மேலும், “இப்போது ஒரு தேதியாக ஆகஸ்ட் 15ஆம் தேதி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை பிக் பாஸ் 2 ஆகஸ்ட் 15ஆம் தேதிகளில் உச்சத்திற்குப் போனால், அந்த நேரத்தில் சி.ஜி. வேலைகள் எல்லாம் முடிந்து சரியாக இருந்தால், ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. விஸ்வரூபம் 2 படத்தில் மிலிட்டரியைச் சம்பந்தப்படுத்தி இருப்பதால் ஆகஸ்ட் 15ஆம் தேதி வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன” என்று தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*