முடிவுக்கு வந்த செக்கச் சிவந்த வானம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவந்த செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ், ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இடையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டத்தால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு, வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. சில முக்கிய காட்சிகளை படமாக்க வெளிநாடு சென்றது படக்குழு. அங்கு சிம்பு, அருண் விஜய் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சில காட்சிகளை படமாக்கினர். அதனைத் தொடர்ந்து செர்பியா நாட்டில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினர்.
தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர். இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதமாக முடித்து, செப்டம்பரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். மணிரத்னம் பிறந்த நாளான (ஜூன்2) படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்று அதிவேகமாக நடத்தப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.