;
Athirady Tamil News

வசந்தபாலனிடம் பயிற்சியெடுக்கும் நந்தன்..!!

0

இசையமைப்பாளர் சிற்பியின் மகனான நந்தன் பள்ளிப் பருவத்திலே படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகனாக மட்டுமே நடித்து தனது திறமையை நிரூபிப்பேன் என்றில்லாமல் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதை இளம் நடிகர்கள் பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். தற்போது நந்தனும் அந்த வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

காவியத்தலைவன் படத்தைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் நண்பன் வேடத்தில் நடிக்க நந்தன் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் தான் இணைந்தது குறித்து அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். “இது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம். எனது முதல் படத்தின் இசை வெளியீட்டிற்கு அழைப்பதற்காக வசந்தபாலன் சாரை சந்திக்கச் சென்றேன். அவர் என் படத்தைப் பார்ப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஆச்சரியமளிக்கும் விதமாகப் படக்குழுவிடமிருந்து சமீபத்தில் எனக்கு அழைப்பு வந்தது. சார் என்னைச் சந்திக்க வேண்டும் என்று கூறியதாகச் சொன்னார்கள். நான் அவரைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் அவர் அதிகமாக எதுவும் பேசவில்லை. தொடர்ந்து சில நாள்களுக்குப் பின் அவர் என்னை அழைத்தார். ‘நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களை வைத்துக் காதல் கதை பண்ணலாம். ஆனால் இந்தப் படத்தில் அப்படியான பாத்திரம் உங்களுக்கு இல்லை. உங்களால் நடிக்க முடியுமா’ என்றார். நான் உடனடியாக நடிக்கிறேன் என்றேன். உங்கள் படம் என்றால் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன்” என்று தெரிவித்துள்ளார்.

“முதல் நாள் படப்பிடிப்பிற்கு என்னுடன் எனது தந்தை சிற்பி வந்திருந்தார். அவரிடம் இயக்குநர் நீங்கள் ஃபர்ஸ்ட் காப்பி தயாரான பின்னரே வரவேண்டும் என்று கூறிவிட்டார். தொழில் நேர்த்தியுடன் செயல்படும் இயக்குநருடன் நான் பணியாற்றுவது எனக்குச் சிறந்த கற்றலின் அனுபவமாக அமையும்” என்று நந்தன் கூறியுள்ளார்.

“இரு நண்பர்களுக்கிடையேயான பிணைப்பைப் பற்றி பேசும் படமாக இது இருக்கும்” எனக் கூறும் நந்தன், விரைவில் கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*