;
Athirady Tamil News

இரண்டாம் பாதியில் அடியெடுத்து வைத்த சமந்தா..!!

0

நடிகை சமந்தா தான் நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கு டப்பிங் பேசும்போது எடுத்திருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. திருமணத்திற்குப் பிறகும் தனது மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக்கொண்டு நடித்துவருகிறார். அதன்படி சமந்தாவின் இந்த ஆண்டின் முதல் பாதி வெற்றிகரமாக அமைந்திருக்கிறது. தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம், மகாநடி, தமிழில் நடிகையர் திலகம் மற்றும் இரும்புத்திரை ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

மேலும் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியாக சமந்தாவிற்கு வரவிருக்கிற படங்கள், பெரிய படங்களாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில் சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் கன்னடப் படமான யூ டர்ன் ஆகிய படங்கள் தற்போது சமந்தாவின் கைவசம் இருக்கிறது.

இந்நிலையில் சமந்தாவின் தற்போதைய புதிய அப்டேட்டாக சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் டப்பிங் செய்யும் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை இயக்குநர் தியாகராஜா குமார ராஜா இயக்கியுள்ளார். அவரது முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம், பல்வேறு விமர்சனங்கள் தமிழ்த் திரைப்பட உலகில் உருவாகக் காரணமாக அமைந்திருந்தது.

இதன் காரணமாக இவரது அடுத்த திரைப்படத்தைக் காண திரைப்பட ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். தற்போது சமந்தா டப்பிங் பேசியிருக்கும் புகைப்படம் வெளியிட்டிருப்பது இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய பின் இங்கு திரையிடலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*