;
Athirady Tamil News

ஒரு நடிகையின் வாக்குமூலம்..!!

0

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் சர்மிளா. தனது வாழ்வில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களைத் தற்போது பகிர்ந்துள்ளார்.

நல்லதொரு குடும்பம், தையல்காரன், கிழக்கே வரும் பாட்டு, முஸ்தபா, மனசே மவுனமா உள்படப் பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் சர்மிளா. மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி மலையாள நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார்.

சர்மிளா முதலில் பாபு ஆண்டனி என்ற மலையாள நடிகரைக் காதலித்தார். அதன் பிறகு சில பிரச்சினைகளால் அவரைப் பிரிந்து கிஷோர் சத்யா எனும் நடிகரை மணந்து கொண்டார். அதன் பிறகு அவரை விவாகரத்து செய்து கொண்டு ராஜேஷ் எனும் இன்ஜினீயரை மணந்து கொண்டார். 2006ஆம் ஆண்டு ராஜேஷையும் விவாகரத்து செய்துவிட்டு இப்போது தனியாக வாழ்ந்து வருகிறார். அவருக்குச் சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன. திருமண உறவும் திருப்தியாக அமையவில்லை. இதுகுறித்து மாத்ருபூமி பத்திரிகைக்கு சர்மிளா அளித்துள்ள பேட்டியில்…

“நான் பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்தும் எதிர்பாராத சம்பவங்கள் வாழ்க்கையில் நடந்துவிட்டன. இப்போது என்னிடம் பணம் இல்லை. ஆரோக்கியத்தையும் இழந்துவிட்டேன். இந்த மாதிரி விஷயங்கள் என் வாழ்க்கையில் முன்பே நடந்திருந்தால் தற்கொலை செய்துகொண்டிருப்பேன். ஆனால் இப்போது சாக முடியாது.

படுக்கையில் இருக்கும் எனது தாயாரை கவனிக்க வேண்டியுள்ளது. மகன் நலனும் முக்கியம். அதனால் தற்கொலை முடிவை எடுக்கவில்லை. எனது கஷ்டம் மகனுக்கு வரக் கூடாது என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் நிறைய படங்களில் நடித்தேன். இப்போது பெரிய இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டால் அவர்கள் தரத் தயாராக இல்லை. எனக்கும் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்.

எதிர்காலத்துக்காக பணம் சேர்க்காமல் இருந்தது நான் செய்த பெரிய தவறு. திரைப்படத்தில் மும்முரமாக நடித்தபோது ஆடம்பரமாக வாழ்ந்தேன். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று நட்சத்திர ஓட்டல்களில் தங்கினேன். அங்குதான் சாப்பிடுவேன். சம்பாதித்த பணத்தில் பாதிக்கு மேல் வெளிநாடுகளுக்குச் சென்றுவந்ததில் கரைந்தது.

திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கை தலைகீழாக மாறியது. எனது வீட்டையும் நிலத்தையும் விற்க வைத்தனர். நான் செய்த பெரிய தவறு வீட்டை விற்றதுதான். அந்த வீடுதான் எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. வீடு போன பிறகு மன அழுத்தம் ஏற்பட்டு உடல் எடை குறைந்து எனது ஆரோக்கியமே கெட்டுப்போனது” என்று சர்மிளா கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − ten =

*