;
Athirady Tamil News

உதவி இயக்குநரைத் தாக்கினாரா பப்லு?..!!

0

சின்னத்திரை நடிகர் பப்லு என்கிற பிருத்விராஜ் படப்பிடிப்புத் தளத்தில் உதவி இயக்குநர் ஒருவரை அடித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களைக் காட்டிலும் தொலைக்காட்சித் தொடர்களின் தாக்கம் அதிகம். வயது பேதம் இல்லாமல் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் செல்வாக்கு பெற்றுள்ளன இத்தொடர்கள். இந்தப் பிரபலத்துக்குக் காரணமாக இருப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது அந்தத் தொடர்களில் பணிபுரியும் உதவி இயக்குநர்கள்.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி சீரியலில் நடிக்கும் பப்லு என்கிற பிருதிவிராஜ் உதவி இயக்குநரை அடித்ததாகச் செய்திகள் வெளியாகின. இது சம்பந்தமாக சீரியல்களில் பணிபுரியும் உதவி இயக்குநர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, “நாங்க விஷயத்தைப் பெரிதாக்க விரும்பவில்லை. அதேநேரம் இப்படி நடப்பதை வெளியில் சொல்லியே ஆக வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகும்” என்றனர்.

மேலும், “வாணி ராணி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்போதும் தாமதமாக வருவது பப்லுவோட வழக்கம். படக்குழுவுக்கு இது பெரிய பிரச்சினையாகவே இருந்தது. பிரச்சினை நடந்த அன்று சீனியர் உதவி இயக்குநர் அழகு, பப்லுவிடம் தாமதமாக வருவது குறித்து படக்குழுவின் வருத்தத்தைக் கூறியுள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. கடுப்பான அழகு, சீரியல் தயாரிப்பு நிறுவனத்துக்குத் தகவல் தந்துவிட்டார். தயாரிப்பு தரப்பு பப்லுவை அழைத்து என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. பப்லு வலுக்கட்டாயமாக உதவி இயக்குநர் அழகுவிடம் போய் சத்தம் போட்டுக் கத்தியிருக்கிறார். பதிலுக்கு அழகும் வாக்குவாதம் செய்ய, பப்லு உதவி இயக்குநர் அழகை அடித்துள்ளார். பப்லு ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படிச் செய்தது இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்பும் சிலரிடம் இப்படி நடந்துள்ளார். ஆனால், இதற்கு யூனியன் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. இந்த முறையாவது அவர் மீது நடவடிக்கை எடுத்து, இது போன்ற செயல்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக நடிகர் பப்லுவை நாம் தொடர்புகொண்டு பேசியபோது, “இந்தப் பிரச்சினை அப்போதே முடிந்துவிட்டது. இதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் எனத் தெரியவில்லை. அவரது உடல்மொழி ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்பதால் நான் கோபப்பட்டேன். அவ்வளவுதான். அடிக்கவில்லை. தள்ளியதை அடித்ததாகக் கூறுகிறார்கள். இன்றுகூட நான் அந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். எனவே பிரச்சினை முடிந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 14 =

*