;
Athirady Tamil News

வேகமெடுக்கும் பிரபுதேவா படம்..!!

0

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் குறுகிய காலத்தில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன.

தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி இந்தியா முழுவதும் பிஸியாக வலம்வரும் கலைஞர்களில் ஒருவர் பிரபுதேவா. நடனக் கலைஞராகக் கலைப்பயணத்தைத் தொடங்கிய பிரபுதேவாவின் நடிப்புத் திறனை தமிழ்த் திரையுலகமே வெளிக்கொண்டு வந்தது. தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்தும் முக்கியமான படங்களில் நடனக் கலைஞராகப் பணியாற்றியும் வந்த இவர் தமிழ், தெலுங்கு, இந்தித் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராகவும் வலம்வருகிறார். தான் தேர்ந்து கொள்ளும் துறைகளில் வெகு விரைவில் முன்னணி இடத்திற்குச் சென்றுவிடுவது பிரபுதேவாவின் சிறப்பம்சமாக உள்ளது.

பிரபுதேவா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மெர்குரி படத்தில் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வரவேற்பு பெற்றார். தொடர்ந்து அவர் நடிப்பில் லட்சுமி, யங் மங் சங் படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.

தற்போது அவர் ஏ.ஜி.முகில் இயக்கும் புதிய படத்தில் நடித்துவருகிறார். ஜூன் 11ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது. இந்தப் படத்தில் முதன்முறையாக பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். நிவேதா பெத்துராஜ் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் மகேந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். பரபரப்பாக இதன் படப்பிடிப்பு நடைபெற்றுவந்த நிலையில் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதில் பிரபுதேவா கலந்துகொண்டார்.

விரைவில் தொடங்கவுள்ள அடுத்தகட்ட படப்பிடிப்பில் நிவேதா உள்ளிட்ட மற்ற நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். நேமிசந்த் ஜபக் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*