19 May 2017 0 Comments Report

கல்வி, சுகாதாரத்திற்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு – ஸ்ரீநகர் கவுன்சில் கூட்டத்தில் முடிவு..!! (வீடியோ)

ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களின் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகின்றது.

ஜி.எஸ்.டி சட்டம் குறித்த இறுதிக் கட்ட ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களின் முக்கிய அதிகாரிகளும், அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதிமந்திரி அருண்ஜெட்லி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரிகள் குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிப்பது என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில் நான்கு விதமான வரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 5%, 12% மற்றும் சராசரியாக 18 % இறுதியில் ஆடம்பர பொருட்களுக்கு 28 சதவீதம் என வரி விதிக்கப்படும். பெரும்பாலும் போக்குவரத்து சேவைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ஜி.எஸ்.டி மசோதா நுகர்வோருக்கு ஏதுவானதாக இருக்கும். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஜி.எஸ்.டி.-யில் இருந்து விலக்கு அளிக்கப்படும்” என்றார்.

முன்னதாக பாலுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தானியங்களின் விலையும் கண்டிப்பாக குறையும் என்று கூறப்பட்டது.

இதனையடுத்து ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஜூன் மாதம் 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

*