19 August 2017 0 Comments Report

விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்வது போல் ரூ.15 ஆயிரம் பணத்தை சுருட்டிய ஆசாமி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வேலை செய்யும் நரேந்திரா என்பவர் டெல்லி வழியாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்று உள்ளார். டெல்லியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காஷ்மேரா கேட் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது அவர் மீது கார் ஒன்று பலமாக மோதிவிட்டது.

இதில் நரேந்திரகுமாருக்கு ரத்தக் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இடுப்பு, கழுத்து, கால்களில் அடிபட்டு நடக்க முடியாமல் கதறி அழுது உள்ளார். சுமார் 12 மணி நேரமாக சாலையின் ஓரத்தில் உதவி கோரி கதறி அழுது உள்ளார், ஆனால் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை.

அவ்வழியே சென்ற பலரும் அவர் குடித்துவிட்டு கிடப்பதாக கருதிய நிலையில், உதவி செய்வதாக வந்த சிலர் அவரிடம் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சாலையோரம் நடந்து வந்த இருவரில் ஒருவர் தண்ணீர் கொடுத்து உதவியுள்ளார். மற்றொருவர் அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த ரூ.3000 ரொக்கம், மற்றும் ரூ.12000 பணம் இருந்த பையை திருடிச் சென்றுள்ளார். கடந்த 15 ந்தேதி இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்த நரேந்திராவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கு காரணமான கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய நபருக்கு உதவி செய்வதுபோல், மனித நேயமின்றி அவரிடம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் வேதனை அளிப்பதாக உள்ளது.

விபத்து நடந்த இடத்தில் பிச்சைக்காரர்களும், போதை மருந்து பயன்படுத்துவோரும் அதிக அளவில் நடமாடும் இடம் என்பதால் யாரும் அவரை கண்டுகொள்ளாமல் சென்றிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.


Post a Comment

*