17 December 2017 0 Comments Report

ஓகி புயலில் சிக்கி, காணாமல் போன மீனவர்களின் நிலை?..!!

ஓகி புயலில் சிக்கி, காணாமல் போன தமிழக மீனவர்களில் நான்கு பேரின் உடல்களை மட்டுமே தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது.

கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சிதைந்துபோனது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலரை இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. புயல் தாக்கப்பட்டு இரண்டு வாரங்கள் முழுமையாக முடிந்த நிலையில், தமிழக மீன்வளத் துறை அதிகாரிகளும், வருவாய்த் துறையினரும் ஊர் ஊராகச் சென்று கணக்கெடுப்பு நடத்தியும், அலுவலகங்களிலுள்ள கோப்புகளைப் பார்த்தும் மீனவர்களைக் கணக்கெடுத்து வருகின்றனர்.

காணாமல்போன மீனவர்கள் குறித்து மத்திய அரசு ஒரு புள்ளிவிவரம் வெளியிடுகிறது. ஆனால், மீனவப் பிரதிநிதிகளும், அரசியல் கட்சியினரும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போனதாக அறிக்கை விட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் மீனவர்களின் உடல்கள் அயல்நாட்டுக் கடற்கரையில் ஒதுங்கியிருப்பதாக வெளியான வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த உண்மை நிலையை அறிந்துகொள்ள தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “அயல்நாட்டு கடற்கரையில் ஒதுங்கியுள்ள உடல்கள் தமிழக மீனவர்களுடையது அல்ல. அந்த வீடியோவும் பழைய வீடியோ. வீடியோவைப் பார்த்தாலே அந்த உடல்கள் பத்துமணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் மூழ்கியது என்று தெரியும்.

தமிழகத்தில் கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பார்த்தால், 400 மீனவர்களைக் காணவில்லை, அதில் 58 மீனவர்கள் வேறு மாநிலத்திலிருந்து மீன் பிடிப்பு வேலைக்குச் சென்றவர்கள். மீதமுள்ள 342 மீனவர்கள் தமிழகத்திலிருந்து கடலுக்குச் சென்றவர்கள்.

இவர்களில் கடந்த 12ஆம் தேதி மூன்று படகுகளும், 40 மீனவர்களும் கரை திரும்பியுள்ளனர். மீதமுள்ள 320 பேரும் பத்திரமாக கரை திரும்புவார்கள் என்ற நம்பிக்கை அழுத்தமாக உள்ளது” என்றவரிடம், “மீதி 40 மீனவர்களின் நிலை என்னவானது? என்று கேட்டோம்.

“40 மீனவர்கள் இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதில் நான்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்னும் 36 உடல்களின் நிலை என்னவானது என்பது கேள்விக்குறியாக உள்ளது” என்று விவரித்தார்.

“40 மீனவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்புகள் இல்லை என்று அழுத்தமாக எப்படி சொல்கிறீர்கள்?” என்ற நம் கேள்விக்கு, “35 மீனவர்கள் சிறியவகை படகில் கடலுக்குச் சென்றிருக்கிறார்கள். எனவே அந்த படகுகள் சேதமடைந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. அதில் பயணித்த மீனவர்களும் தவறியிருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன” என்றார்.

40 மனித உயிர்கள் என்பது சாதாரணமானதில்லை என்றபோதிலும், மீனவர்களின் உடல்களையாவது மீட்டுக்கொடுங்கள் என்ற ஏக்கத்தையும் எதிர்பார்ப்புகளையும் மீனவர்கள் மத்தியில் காணமுடிகிறது.


Post a Comment

*