17 December 2017 0 Comments Report

ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப இண்டர்போல் மறுப்பு..!!

உரிய ஆதாரங்கள் இல்லாததால் மத போதகரான ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப முடியாது என இன்டர்போல் தெரிவித்துள்ளது.

மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், தனது வெறுப்பு பேச்சுக்கள் மூலம் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றுவதாக புகார் எழுந்தது. அந்தவகையில் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஜாகிர் நாயக் ஐ.எஸ். அமைப்பில் இணைய வைத்ததாக கூறப்பட்டது.

வங்காளதேசத்தில் 2015, ஜூலையில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவர், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களால் தான் கவரப்பட்டதாக தெரிவித்து இருந்தார். இதனால் அவரது உரைகளை இங்கிலாந்து, கனடா மற்றும் மலேசியா நாடுகள் தடை செய்துள்ளன.

இதையடுத்து, இந்த தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு 2015, அக்டோபர் 15ம் தேதி அறிவித்தது. ஜாகிர் நாயக் மீது வழக்குப்பதிவு செய்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள், அவரது தொண்டு நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த அமைப்புக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டதால் ஜாகிர் நாயக் வெளிநாட்டில் தலைமறைவானார். அவர் இந்தியா திரும்பாமல் உள்ளார்.

இதற்கிடையே, சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் அமைப்பிற்கு என்.ஐ.ஏ. கடிதம் எழுதியது. அதில், ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு கோரியபடி ஜாகிர் நாயக்குக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப முடியாது என இண்டர்போல் பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், ஜாகிர் நாயக்கிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் அவருக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்ப முடியாது என கூறியுள்ளனர்.


Post a Comment

*