17 December 2017 0 Comments Report

ராகுல்காந்திக்கு தமிழகத்தில் பிரமாண்ட பாராட்டு கூட்டம் : திருநாவுக்கரசர் பேட்டி..!!

ராகுல் காந்திக்கு தமிழகத்தில் பிரமாண்ட பாராட்டு கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், பீட்டர்அல்போன்ஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

வரலாற்று சிறப்பு மிக்க காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

பல்வேறு சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் ராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். எதிர்காலத்தில் காங்கிரசை ஆளுங்கட்சியாக அவரால் மாற்ற முடியும். பா.ஜனதாவுக்கு மாற்று என்பது அகில இந்திய அளவில் காங்கிரஸ் மட்டும் தான். பல தலைவர்கள் இருந்தாலும் மோடிக்கு மாற்று ராகுல்காந்தி தான்.

காங்கிரஸ் ஆட்சிக்கு அஸ்திவாரம் போடப்பட்ட நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. ராகுல்காந்திக்கு தமிழ்நாட்டில் சென்னை அல்லது தமிழகத்தின் மத்திய பகுதியில் பிரமாண்ட பாராட்டு கூட்டம் நடத்தவுள்ளோம். இந்த கூட்டத்துக்கு அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைப்பது பற்றி ஆலோசித்து வருகிறேன். தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் என்பதை நான் அடியோடு மறுக்கிறேன்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தற்போது நடைபெறும் நீதி விசாரணை போதுமானதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இன்னும் கூடுதல் விசாரணை இருந்தால் நல்லது தான். யாரெல்லாம் தவறு செய்தார்களோ அவர்கள் கண்டிப்பாக தண்டனை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு மகன், மகள் என்று இதுவரை 4 பேர் வந்துவிட்டனர். எனக்கு தெரிந்தவரை ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. ஜெயலலிதா மர்மமாக வாழ்ந்ததால் மர்மமாக பல விஷயங்கள் தற்போது பேசப்படுகிறது. இது துர்பாக்கிய வசமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

எச்.வசந்தகுமார் கூறுகையில், ‘இந்தியாவை ஒரு புதிய கோணத்தில் கொண்டுவருவதற்கு ராகுல்காந்தி எல்லாவிதமான முயற்சியும் எடுத்துக் கொண்டிருக்கிறார். வருகிற தேர்தலில் அவர் பிரதமராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்றார்.


Post a Comment

*