;
Athirady Tamil News

கலைஞர் கருணாநிதிக்கு, வன்னியிலிருந்து பிரபாகரன் கடிதம்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -138) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

0

கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 138)

திருமலை பிரஜைகள் குழுத் தலைவராக இருந்தவர் பா. விஜயநாதன். திருமலையில் கூட்டணி எம்.பி.யாக இருந்த அமரர் நேமிநாதனின் சகோதரர்தான் விஜயநாதன்.

ஆரம்பத்தில் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தார். பின்னர் கூட்டணியின் போக்கு விஜயநாதனுக்குப் பிடிக்கவில்லை. தனியாளாகவே சமூக சேவைகளில் ஈடுபடத் தொடங்கினார்.

திருமலையில் இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க அரும்பாடுபட்டார். பிரமச்சாரியான விஜயநாதனுக்கு மக்களிடத்தில் நல்ல பெயர்.

விஜயநாதனிடம் ஒரு குணமிருந்தது. தனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதை மறைக்காமல் கூறிவிடுவார். அந்தக் குணம்தான் பாதகமாக முடிந்தது.

பன்குளம் தாக்குதல்

இந்தியப் படையினர் பன்குளத்திற்குச் சென்று விறகுவெட்டி வருவது வழக்கம். மக்களுக்கும் விறகு வெட்டிக்கொடுப்பார்கள்.

இந்தியப் படையினர் அடிக்கடி சென்றுவருவதைப் புலிகள் அவதானித்தனர். இந்தியப் படையினர் ஆயுதங்களையும் பெருமளவு கொண்டு செல்வதில்லை.

சரியான தருணம் பார்த்துக்கொண்டிருந்த புலிகள், பன்குளம் சென்று கொண்டிருந்த இந்திய இராணுவத்தை வழிமறித்தனர்.

இந்தியப் படையினர் சென்ற வாகனத்தில் பொதுமக்களும் இருந்தனர். அவர்களைத் தனியாக இறக்கிவிட்டு இந்தியப் படையினரைச் சுட்டுத்தள்ளினார்கள்.

இச் சம்பவத்தின் பின்னர் அங்கு சென்ற இந்தியப் படையினர் கொல்லப்பட்ட தமது சகாக்களுக்காகப் பழிவாங்கும் வெறியோடு கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கத் தொடங்கினார்கள்.

பரல்களில் தண்ணீரை நிரப்பி வைத்து அதற்குள் தலைகள் அமிழும்படியாக தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்தார்கள்.

இச் சம்பவங்களையறிந்த விஜயநாதன் உடனடியாக இந்தியப் படை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டார். சம்பவம் நடந்த இடத்திற்கு விஜயநாதனையும் கெலிகொப்டரில் அழைத்துச் சென்றார்கள்.

நடந்த சம்பவங்களையெல்லாம் விலாவாரியாகக் கேட்டறிந்த விஜயநாதனுக்குப் புலிகள் செய்தது தவறென்று மனதில் பட்டது.

‘விறகு வெட்டுவதற்குச் சென்ற படையினரை அவர்கள் தாக்கியிருக்கக் கூடாது. ஆயுதங்களைக் கூட அவர்கள் கொண்டு செல்லாதபோது  அவர்களைத் தாக்கியது சரியல்ல.

அதேநேரம் இந்தியப் படையினர் நம் மக்களைத் தாக்கியதையும் சரியென்று நான் சொல்லமாட்டேன். இருபக்கமும் பிழையிருக்கிறது’ எனத் தன்னைச் சந்திக்கும் மக்களிடம் கூறினார் விஜயநாதன்.

விஜயநாதன் இப்படிக் கதைப்பதைப் பார்த்த அவரது நண்பர் ஒருவர் குறிக்கிட்டு, இப்படிப் பகிரங்கமாகப் பேசாதீர். அவர்கள் காதில் விழுந்தால் வீண் பிரச்சினைதானே? என்றாராம்.

அவர் சொன்னதும் விஜயநாதனுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘உமக்குப் பயம் என்றால் ஒரு பக்கத்தில் போய் இரும். சொல்ல வேண்டியதைச் சொல்லத்தானே வேண்டும்’ என்றார் விஜயநாதன்.

இதன் பின்னர் இரண்டு நாட்கள் சென்றபின் விஜயநாதன் வீட்டிற்கு சில இளைஞர்கள் வந்தார்கள்.

‘உங்களை விசாரிக்க வேணும். முகாமுக்கு வாருங்கள். மோட்டார் சைக்கிளில் அழைத்துப் போய் விடிவதற்குள் கொண்டுவந்து விட்டுவிடுவோம்’ என்றார்கள்.

அவர்களுடன் சென்ற விஜயநாதன் அதன் பின்னர் எத்தனையோ பொழுதுகள் விடிந்துவிட்டன. விஜயநாதன் வீடு திரும்பவேயில்லை.

அவர் கொல்லப்பட்டார். ஈரோஸ் இயக்கத்தினர்தான் அவரைச் சுட்டுக்கொண்டனர்.

Pawan11  கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 138) Pawan11

பல் வைத்தியர்.

திருமலையிழந்த மற்றொரு உன்னதமான மனிதர் டாக்டர் ஞானசேகரம். நண்பர்களால் ஞானி என்று சுருக்கமாக அழைக்கப்பட்டார். இவர் கல்வி கற்றது திருமலை இந்துக் கல்லூரியில்.

ஞானசேகரன் ஒரு பல் வைத்தியர். இந்து இளைஞர் மன்னறத்தின் ஒரு முக்கிய உறுப்பினர்.

மாக்சியக் கொள்கையில் ஈடுபாடு இருந்தமையால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் ஆதரவாளராகச் செயற்படத் தொடங்கினார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர்களில் ஒருவரான டக்ளஸ் தேவானந்தா கொழும்பில் இருந்தபோது, ஞானசேகரன் தன்னால் முடிந்த உதவிகளை இரகசியமாகச் செய்து வந்தார்.

பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உளவுப்பிரிவு நடவடிக்கைகளுக்கு டாக்டர் ஞானசேகரம் பெரிதும் உதவினார். சில ஆயுதங்களை டாக்டர் ஞானசேகரம் மறைத்து வைக்க உதவினார்.

கொழும்பில் நடைபெற்ற ஒரு கொள்ளை நடவடிக்கையின் போது, டாக்டர் ஞானசேகரத்தின் உதவி காரணமாகவே ஈ.பி.ஆர்.எல்.எஃப் முக்கிய பிரமுகர்கள் தப்பிக்கக் கூடியதாக இருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தைச் சேர்ந்த ரமேஸ், இப்ராகீம் எனப்படும் சிவகாந்தன் ஆகியோர் டாக்டர் ஞானசேகரத்தின் அறையில்தான் கொழும்பில் இரகசியமாகத் தங்கியிருந்தனர்.

அந்தளவுக்குத் தனக்கு வரக்கூடிய பாதிப்புக்கள் பற்றியெல்லாம் அச்சம் கொள்ளாது, இயக்க நடவடிக்கைக்கு உதவும் ஒருவராக ஞானசேகரம் இருந்தார்.

கொழும்பில் பல் வைத்தியராகக் கடமையாற்றிய போதும், தொழிற்சங்க ஈடுபாடுடையவராக இருந்தார். சிங்களம், தமிழ் என்று பேதம் பேசாது, தொழிலாளர்களின் பிரச்சினைக்குக் கைகொடுத்து உதவியதால் ஞானசேகரத்திற்கு நல்ல மதிப்பு இருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பிற்குள் ஏற்பட்ட பிரச்சினைகளும், பிளவுகளும் ஞானசேகரத்திற்கு அந்த இயக்கம் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியது.

படிப்படியாக விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக மாறினார் ஞானசேகரம்.

இந்தியப் படைகாலத்தில் தன்னுடைய சொந்த இடமான திருமலையில் பணியாற்றியதோடு, மக்களுக்குச் சேவையும் செய்துகொண்டிருந்தார்.

திருமலையில் உருவாகி வரும் இளம் தலைவர் என்று மக்கள் கருதுமளவிற்கு ஞானசேகரத்தின் பணிகள் இருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் திருமலை மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர் ஜோர்ச். இந்தியப் படையினர் கூட அதிர்ச்சியடையுமளவுக்கு அடாவடிகளில் கொடிகட்டிப் பறந்தார்.

திருமலை மக்களிடம் ஜோர்ச்சிற்கு நல்ல பெயர் இருக்கவில்லை. ஆனால் திருமலை மக்களின் தலைவன் தானேதான் என்பது ஜோர்ச்சின் எண்ணம்.

டாக்டர் ஞானசேகரத்திற்கு மக்களிடம் செல்வாக்கு ஏற்பட்டுவருவதைக் கண்டு ஜோர்ச்சிற்குப் பொறுக்கவில்லை.

புலிகளுடனட டாக்டர் ஞானசேகரம் ஆதரவாக இருப்பதைக் காரணமாக வைத்து, அவரை ஒருநாள் கடத்திப் போனார்கள். ஜோர்ச் தலைமையில் வந்த ஒரு குழுவினரே ஞானசேகரத்தைக் கடத்திக்கொண்டு சென்றனர்.

alpirataa  கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 138) alpirataaகடத்தலும் கண்டனமும்.

ஞானசேகரம் கடத்தப்பட்ட செய்தி திருமலை மாவட்ட மக்களுக்குத் தீயாகப் பரவியது. எங்கும் கடும் கண்டனங்கள் கிளம்பின. முன்னெப்போதும் இல்லாத வகையில் திருமலையில் மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருமலை நெல்சன் தியேட்டர் முன்பாக ஊர்வலத்தினரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாக சந்தித்தவர் ராம் ராஜகாரியர். அவர்தான் கடந்தவாரம் நாம் விபரித்த வடக்கு-கிழக்கு மாகாண சபையின் சபாநாயகர்.

ராஜகாரியருக்கு கொழும்பில் பல உதவிகள் செய்தவர் டாக்டர் ஞானசேகரம். பண உதவிகளும் அதிலடங்கும்.

ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த ராஜகாரியர் முகத்தை நல்ல சோகமாக வைத்துக்கொண்டு, தத்ரூபமாக நடித்தார்.

‘டாக்டர் ஞானசேகரத்தைக் கண்டுபடித்து உங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் கவலைப்பட வேண்டாம்…’ என ராஜகாரியர் சொல்லிக்கொண்டிருந்த போது கூட்டத்தினருக்கு வந்தது கோபம்.

‘நீங்கள் தானே கடத்தி வைத்திருக்கிறீர்கள். பிறகென்ன தேடுதல்? ஞானியை விடுதலை செய்யுங்கள்’ எனக் குரலெழுப்பினர்.

இதற்கிடையே ஞானி கடத்தப்பட்டதை ஈ.பி.ஆர்.எல்.எஃப் உள்ளிட்ட சகல இயக்கங்களும் கண்டித்துத் துண்டுப் பிரசுரங்களைத் தனித்தனியாக வெளியிட்டிருந்தன.

ராஜகாரியரும் ஞானியைத் தேடுவதாகச் சொன்னதுடன், அக்கூட்டத்தில் நின்ற சிலர் தமக்கிடையில் பின்வருமாறு கதைத்துக்கொண்டனர்.

‘ஒருத்தரும் கடத்தவில்லை என்றால் இப்போது நாங்கள்தான் எங்கள் மீது சந்தேகப்பட வேண்டும் போல் இருக்கிறது. பொதுமக்கள்தான் கடத்தினார்கள் என்று சொல்லப்போகிறார்களோ?

கடைசிவரை டாக்டர் ஞானசேகரம் விடுவிக்கப்படவில்லை.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் முகாமொன்றில் வைத்துக் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆசனவாயிலில் மிளகாய்த் தூளைப் போட்டனர். தலைகீழாகக் கட்டித்தொங்கவிட்டனர்.

‘புலிகளின் பிரசுரங்கள் திருமலையில் விநியோகிக்கப்பட்டது யாரால் என்று கேட்டார்கள். திருமலையில் உள்ள புலிகள் உறுப்பினர்களின் விபரங்களைக் கேட்டு உதைத்தார்கள்.’

இறுதியாக டாக்டர் ஞானசேகரம் ஜோர்ச்சினால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

திருமலையிலிருந்து உருவாகிய ஒரு இளம் தலைவனைத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு தீனியாகக் கொடுத்துவிட்டார்கள்.

டாக்டர் ஞானசேகரத்தின் கொலைக்கு இன்றுவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் உரிமை கோரவில்லை. ஆனால் திருமலை மக்கள் அதனை

மறக்காமல் வைத்திருந்து, ஈ.பி.ஆர்.எல்.எஃப் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் (1994) படுதோல்வியைக்கொடுத்தனர்.
பெருமாளின் விளக்கம்.

வடக்கு-கிழக்கு மாகாண சபையின் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினர் வைத்திருந்த மக்கள் தொண்டர் படையினர் பலர் பொதுமக்களுடன் கண்ணியக் குறைவாகவே நடந்துகொண்டனர்.

வயதில் மூத்தவராக இருந்தாலும் கூட ‘உஸ்’ என்றோ, ‘ஏய்’ என்றோ கூப்பிடுவார்கள். மரியாதைக் குறைவாக நடத்துவார்கள்.

திருமலையில் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளைச் சந்தித்து இது தொடர்பில் முறையிட்டனர்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட பெருமாள், அவர்களிடம் சொன்னது இது, ‘எனக்குப் புரிகிறது இதை நாங்கள் வேறொரு கோணத்தல் பார்க்க வேண்டும்.

சி.வி.எஃப் இல் சேர்ந்துள்ளவர்கள் கிராமப் புறங்களிலிருந்து வந்துள்ள பொடியங்கள். படிப்பறிவும் காணாது விட்டுத்தான் பிடிக்கவேணும்’

ltte-members-begin-2  கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 138) ltte members begin 2

கனவுகள் கற்பனைகள்.

இந்தியப் படையினர் காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப். ஆகிய இயக்கங்களின் தலைவர்களும் பிரமுகர்களும் கண்ட கனவுகளும் கற்பனைகளும் வேடிக்கையானவை.

மணல் கோட்டை என்று சொல்லுவோம் அல்லவா அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்குக் கற்பனைக் கோட்டையைக் கட்டினார்கள்.

திருமலையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையே வேடிக்கையான கற்பனைகளுக்கு சிறு உதாரணமாகத் தருகிறேன்.

அவரது பெயர் நவதீபன். ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தல் இருந்தவர். திருமலையில் ஆட்சேர்ப்பிற்காக இளைஞர்களையும் சிறுபையன்களையும் பிடிப்பதில் ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினரும் ஈடுபட்டடிருந்தனர்.

தனது உறவினரான ஒரு பையனைக் காணவில்லை என்று நவநீதனிடம் சென்றார் ஒரு பிரமுகர்.

காணாமல் போன அந்தப் பையனுக்குப் புலிகள் இயக்கத்தில் சேரத்தான் விருப்பம். ‘புலிகளில் சேரப்போகிறேன் என்று வீட்டில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான்’

பையன் காணாமல் போனதும் புலிகளில்தான் போய்ச் சேர்ந்துவிட்டான் என முதலில் நினைத்தனர். பின்னர்தான் ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினர்தான் பிடித்துச் சென்றனர் என்பது தெரிந்தது.

பையனின் உறவினரான அந்தப் பிரமுகர், நவநீதனின் நண்பர் என்பதால் நேரடியாகச் சென்று கேட்டார்.

‘எங்களுடன்தான் இருக்கிறான். பயிற்சி முடிச்சதும் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்.’ என்ற நவநீதன் அடுத்துச் சொன்னதுதான் சுவாரஸ்யமான கதை.

‘பெரிய யுத்தம் தொடங்கப் போகிறது. ஆட்கள் இருந்தால்தான்  பிரதேசங்களைக் கைப்பற்றி வைத்திருக்க முடியும்.  இப்போது பயிற்சி எடுக்கிறார்கள் பாருங்கள் இவர்களுக்குப் பெரிய வேலை ஒன்றுமில்லை.  இரண்டு மூன்று நாட்களுக்குத் தங்கள் பிரதேசங்களைப் பாதுகாத்தால் போதும். பின்னர் எமது தேசிய இராணுவம் வந்து அப்பிரதேசங்களைப் படிப்படியாக பொறுப்பேற்றுக்கொள்ளும்.

தேசிய இராணுவம் பொறுப்பேற்ற பின்னர் இவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். யோசிக்க வேண்டாம் இரண்டு மூன்று மாதங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்றார் நவநீதன்.

விளக்கத்தைக் கேட்டவர் சிலிர்த்துப் போனார். தமது உறவுக்காரப் பையன் அங்கேயே இருக்கட்டுமென்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அந்த விளக்கம் சொன்னாரே நவநீதன், அவர் என்ன சொன்னார் தெரியுமா? தனக்குத் தெரிந்தவர் மற்றும் உறவினர்களின் பிள்ளைகளைப் பாதுகாக்கத்தான் இப்படி ஊரார் பிள்ளைகளைப் பிடித்துக்கொடுக்கும் வேலையைச் செய்தார்.

நவநீதனால் அன்று பிடிக்கப்பட்ட இளைஞர்களும் சிறு பையன்களில் பலரும் இறந்துபோனார்கள்.

குறிப்பிட்ட பிரமுகரின் உறவுக்காரப் பையனும் செத்துப்போனான். இதற்கெல்லாம் முன்னணியில் நின்ற நவநீதன் இப்போது வெளிநாடொன்றில் சுகமாக வாழ்கிறான்.

பொருட்களுடன் பயணம்.

இந்தியப் படையினருக்கு இருந்த வெளிநாட்டுப் பொருட்கள் மீதான மோகம் பற்றி முன்னர் குறிப்பிட்டிந்தேன்.

தமிழகப் பத்திரிகைகளும் அப்படியான செய்தியொன்றை வெளியிட்டிருந்தன.

அச் செய்தி வீடியோ டெக் படத்துடன் பின்வருமாறு வெளியாகியது.

‘இலங்கையிலிருந்து சென்னைக்குத் திரும்பும் இந்திய இராணுவ வீரர்கள், இராணுவத் தளபதிகள் ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை போடுகிறார்கள்.

அப்படிச் சோதனை போட்டத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான வீடியோ டெக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியத் தளபதிகள் மாதத்திற்கு மூன்று முறை இலங்கைக்குப் போய்வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் இரண்டு வி.சி.ஆர்.கள் கொண்டுவருகிறார்கள்.

இவர்கள் புலிகளுடன் போராடப் போகிறார்களா? வீடியோ டெக் வாங்கப் போகிறார்களா? என்று சுங்க இலாகா அதிகாரிகள் வருத்தப்படுகிறார்கள்.

முஸ்லிம் காங்கிரசுக்குள் பூசல்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்திய அரசுடன் நெருக்கமான உறவுகொண்டிருந்தது. இதனால் முஸ்லிம் காங்கிரசிற்குள் சிறு பிணக்குகள் ஏற்பட்டன.

இந்தியப் படையினரால் முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றும் தமக்கு அதில் உடன்பாடு இல்லையென்றும் முஸ்லீம் காங்கிரசின் பொதுச் செயலாளர் எம்.எஸ். ஒஸ்மான் அறிவித்தார்.

இதையடுத்து முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாகவும் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கையும் கொடுத்தார்.

மேல் மாகாண சபையின் அங்கத்துவப் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்தார். அவரின் அறிக்கை இதுதான்.

‘முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கும் அதன் இதர அங்கத்துவருக்கும் இந்தியப் படையினரின் பாதுகாப்பையும் விமானப் போக்குவரத்து வசதியையும் ஏற்றிருப்பது ஏற்கமுடியாத ஒன்று.

பிரதமருடன் முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய பேச்சுக்களில் இஸ்ரேலியர்களை வெளியேற்றுவது குறித்துப் பேசப்படாதது ஆச்சரியத்தையளிக்கிறது.’ என்று கூறியிருந்தார்.

maposi1_2779585g - Copy  கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 138) maposi1 2779585g Copy

ஜீ.கே. மூப்பனார்

தமிழகத் தேர்தல்

தமிழக சட்டபபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றிபெற்றது. இரண்டாக உடைந்த அ.தி.மு.க படுதோல்வி கண்டது. தனியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியடைந்தது.

தி.மு.க. உடன்  அல்லது அ.தி.மு.க.வுடன் இணைந்தே காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் பல தேர்தல்களில் போட்டியிட்டு வந்தது.

1989இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென்று ஜீ.கே. மூப்பனார் வாதாடி ராஜீவ்காந்தியிடம் அந்த முடிவுக்கு அங்கீகாரம் பெற்றார்.

ஆனால், தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மரண அடியாக இருந்தது.

‘இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பிய ராஜீவ்காந்திக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள்’ என்று நெடுமாறன் அறிக்கைவிட்டிருந்தார்.

தமிழக தேர்தல் முடிவையறிந்து வன்னியிலிருந்து பிரபாகரன் ஒரு அறிக்கையை அனுப்பி வைத்தார். தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு அக் கடிதம் அனுப்பப்ட்டது.
கடிதம் இதுதான்…

leader194-600x405  கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 138) leader194எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அண்ணா…

தமக்கென ஒரு நாடு இல்லாது அவதியுற்றுப் பல்வேறு இன்னல்களுக்கும், இடர்களுக்கும் மத்தியில் உலகெங்கும் பரந்துவாழும் 8 கோடித் தமிழ் மக்களும் பெருமைப்படும் வகையில் உண்மையான ஒரு மாநிலத்தின் தமிழக மக்கள் உண்மையான ஒரு ஜனநாயகத் தேர்தல் மூலம் அமைத்துள்ளார்கள்.

தமது விடிவுக்கான பாதை எது என்பதை தமிழக மக்கள் தேர்தெடுத்து, வெற்றிக்கனியைத் தங்களிடம் சமர்ப்பித்துள்ளார்கள்.

தமிழக மக்களின் உள்ளங்களை வென்று இன்று இந்த மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கும் தாங்கள் அமைக்கவிருக்கும் அரசு தமிழக மக்களின் அரசு மட்டுமல்ல. உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலன்களைப் பேணும் ஒரு அரசும் கூட.

இதுவரை கட்சித் தலைவராக இருந்து நாம் நடாத்தும் விடுதலைப் போராட்டத்திற்காக குரல்கொடுத்த தாங்கள் இனி ஆட்சித் தலைவராக இருந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு துணைநிற்பீர்கள் என்பது எமது முழு நிறைவான நம்பிக்கை.

தங்களின் வெற்றியைத் தமிழ மக்கள் தங்களின் வெற்றியாகவே கருகின்றார்கள்.

தங்களை வெற்றியடைய வைத்த தமிழக மக்களுக்கு நன்றியையும் ஆட்சியமைக்க இருக்கும் தங்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்களையும்  தமிழீழ மக்களின் சார்பாகவும்,  எமது இயக்கத்தின் சார்பாகவும், எனது சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’ இவ்வாறு பிரபா தனது கடிதத்தில் எழுதியிருந்தார்.

உடனடியாக, இக்கடிதத்தை தமது கட்சிப் பத்திரிகையான முரசொலியில் கலைஞர் பிரசுரிக்கச் செய்ததுடன், தமிழக பத்திரிகைகள் அனைத்திலும் வெளியாகவும் செய்திருந்தார்.

தொடரும்…
-அரசில் தொடர் எழுதுவது அற்புதன்-  தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.

***** முன்னைய  தொடர்களை பார்வையிட இங்கே  அழுத்தவும்….
You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*