;
Athirady Tamil News

இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்: சித்தராமையா..!!

0

கர்நாடக அரசின் விவசாயத்துறை சார்பில் சர்வதேச சிறுதானியங்கள் கண்காட்சி தொடக்க விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

விவசாய தொழில் செய்வதில் இந்தியா முதன்மையான நாடு ஆகும். நமது நாட்டில் மாறத்தக்க வானிலை நிலவுகிறது. அதேபோல் நமது விவசாயிகள் பல்வேறு பயிர்களை விளைவித்து அறுவடை செய்கிறார்கள். விவசாயத்தை மிகுந்த ஆர்வத்தோடு செய்ய வேண்டும். விவசாய தொழிலின் வருமானம் அதிகரிக்க வேண்டும்.

இதற்காக புதிய ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறவும், உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யவும் பழைய முறையை கைவிட்டு புதிய நடைமுறையை நாம் கையாள தொடங்கி இருக்கிறோம். நாம் குழந்தைகளாக இருந்தபோது இயற்கையான உரங்களைப் போட்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்தோம். அந்த நிலை தற்போது மாறிவிட்டது. அதிகளவில் ரசாயன உரம் பயன்படுத்தப்படுவதால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதனால் இயற்கை விவசாயத்திற்கு எங்கள் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. விளைச்சலை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரசாயன உரங்களை நாம் பயன்படுத்த தொடங்கினோம். இதனால் நம்மால் அதிகளவில் உணவு பொருட்களை உற்பத்தி செய்ய முடிந்தது. ஆனால் அந்த ரசாயன உரங்களால் நாம் பல்வேறு பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது. இப்போது நாம் அதை பற்றி தீவிரமாக ஆலோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மண்ணின் பலம், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மனிதர்களின் உடல் ஆரோக்கியம் ஆகியவை கெட்டுவிட்டது. ரசாயன உரங்களால் மக்கள் படும் பல்வேறு பாதிப்புகளை நாம் கண்ணால் பார்க்கிறோம். விவசாயிகளின் வருமானமும், உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் அதனால் உண்டாகும் பாதிப்புகள் குறைய வேண்டும்.

இதற்காக விவசாய பல்கலைக்கழகங்களில் புதிய சிந்தனைகள், ஆராய்ச்சிகள், சோதனைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவசாயத்துறையில் அதிக ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும். நிலம், மண், நீர்ப்பாசனம், மனிதர்களின் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை மனதில் நிறுத்தி புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வது அவசியம்.

நாட்டில் ராஜஸ்தானுக்கு அடுத்ததாக கர்நாடகத்தில் தான் அதிக தரிசு நிலம் உள்ளது. நமக்கு மழை குறைவாக கிடைக்கிறது. மேலும் உலக வெப்பமயமாதல் காரணமாக வானிலையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மக்கள்தொகை பெருக்கத்தால் விவசாய நிலப்பரப்பு குறைந்து வருகிறது. 10 ஏக்கர், 20 ஏக்கர் நிலத்தை வைத்திருந்தவர்களிடம் தற்போது 10 குன்டா, 20 குன்டா நிலம் தான் இருக்கிறது. விவசாயத்தில் வருமானம் இல்லை என்பதால் அந்த தொழிலை கைவிட்டு மக்கள் நகரங்களை நோக்கி குடியேறி வருகிறார்கள். வேறு வேலைகளை தேடுகிறார்கள்.

படித்தவர்கள் வேலை தேடி வெளியூர் செல்வது இயல்பு. ஆனால் படிக்காதவர்கள், விவசாயம் செய்து கொண்டிருப்பவர்கள் அதை விட்டு நகரங்களை நோக்கி வருகிறார்கள். இது கவலை அளிப்பதாக உள்ளது. விவசாயத்தின் உண்மை நிலையை கருத்தில் கொண்டு, விவசாயத்தை மேம்படுத்துவது, இளைஞர்களை வெளியூர்களுக்கு இடம் பெயர்வதை தடுப்பது, விவசாயத்தை சார்ந்து வாழும் நிலையை ஊக்குவிப்பது ஆகியவற்றில் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

கர்நாடகத்தில் அடிக்கடி வறட்சி ஏற்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளை திரும்பி பார்த்தால் அதில் 13 ஆண்டுகள் வறட்சியால் நமது மாநிலம் பாதிக்கப்பட்டது. அதிலும் கடந்த 3 ஆண்டுகளில் மிக தீவிரமான வறட்சியை கர்நாடகம் எதிர்கொண்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

அதனால் இயற்கை விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். நாட்டிலேயே கடந்த 2004-ம் ஆண்டு இயற்கை விவசாய கொள்கையை வகுத்த முதல் மாநிலம் கர்நாடகம் தான். இந்த கொள்கையில் திருத்தம் செய்து கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தோம். விவசாய மந்திரி கிருஷ்ண பைரேகவுடா இயற்கை விவசாயம் மீது அதிக அக்கறை செலுத்தி பணியாற்றி வருகிறார்.

இதனால் 2,500 ஹெக்டேரில் நடைபெற்று வந்த இயற்கை விவசாயத்தின் நிலப்பரப்பு இப்போது 1 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து உள்ளது. இயற்கை விவசாயம் செய்வதில் விவசாயிகளும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். புதிய விதைகள், தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் விவசாயிகளுக்கு சென்றடைய வேண்டும். ஆராய்ச்சிகளின் பலன் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். அப்போது தான் அந்த ஆராய்ச்சியின் நோக்கம் நிறைவேறும்.

சிறுதானியங்களில் இருக்கும் ஊட்டச்சத்து வேறு எந்த தானியத்திலும் இல்லை. அதனால் சிறுதானியங்களுக்கு பெங்களூரு மிகப்பெரிய சந்தையாக மாறியுள்ளது. இதை மேலும் அதிகப்படுத்தும் பணி நடைபெற வேண்டும். எந்த ஒரு தானியமாக இருந்தாலும் அதற்கு உரிய சந்தை மற்றும் விலை கிடைத்தால்தான் விவசாயிகள் அத்தகைய தானியங்களை தொடர்ந்து விளைவிப்பார்கள்.

நாட்டில் சிறுதானியங்களின் உற்பத்தியில் கர்நாடகம் 3-வது இடத்தில் உள்ளது. இயற்கை விவசாயம் நமது மாநிலத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை இருக்கிறது. சிறுதானியங்களை அதிகமாக விளைச்சல் செய்ய பல்கலைக்கழகங்களில் அதிகளவில் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மக்கள் தற்போது கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். சிறுதானியங்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். எங்கள் வீட்டிலும் சிறுதானியத்தை அதிகமாக பயன்படுத்துகிறோம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இதில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, விவசாயத்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி 21-ந் தேதி(நாளை) வரை நடைபெறுகிறது. இதில் சுமார் 400 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் பங்கேற்று உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 7 =

*