;
Athirady Tamil News

பென்னி குயிக் கல்லறையைக் காப்பாற்றுங்கள்..!!

0

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னி குயிக்கின் கல்லறையைப் புதுப்பித்துக் காப்பாற்றுமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

லண்டன் ஃபிரிம்லேயில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தின் செயலர் சூ ஃபெரோ, மினிஸ்டர் சாரோன் பில்லிங் ஆகிய இருவரும் இன்று ( ஜனவரி19) மதிமுக கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை எழும்பூரில் இருக்கும் தாயகத்துக்கு வருகை தந்தனர். அங்கே மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைச் சந்தித்தனர்.

லண்டனில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில்தான் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் பென்னி குயிக்கின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டு வழக்கப்படி, 100 ஆண்டுகள் கடந்துவிட்டால், அந்தக் கல்லறை அகற்றப்பட்டு, அந்த இடம் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டுவிடும். அதன்படி, பென்னி குயிக்கின் கல்லறை அகற்றப்பட இருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்து, உத்தமபாளையத்தைச் சேர்ந்த சந்தன பீர் ஒலி, பென்னி குயிக் கல்லறையை அகற்றுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

அதற்கு, பென்னி குயிக் செய்த சாதனை, அதற்காக அவரைத் தமிழகத்து மக்கள் எந்த அளவிற்குப் போற்றிப் புகழ்கிறார்கள் என்பதற்கான சான்று ஆவணங்களைத் தர வேண்டும். இதன் பேரில்தான் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சேர்ந்த மேற்கண்ட இரண்டு நிர்வாகிகளும் தமிழகத்திற்கு வந்தனர். பொங்கல் திருநாளின்போது, முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் பென்னி குயிக் நினைவாகச் செய்கின்ற சிறப்புகளை நேரில் பார்த்தனர்.

இது குறித்துத் தங்கள் தேவாலய நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பென்னி குயிக் கல்லறையை அகற்றுவது இல்லை என அவர்கள் உடனடியாக முடிவு எடுத்து, அதற்கான கடிதத்தைத் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு மின் அஞ்சல் வழியாக அனுப்பியுள்ளனர்.

இது பற்றி நம்மிடம் பேசிய மதிமுகவினர், “தமிழகத்திற்கு வருவதற்கு முன்பே, தமிழக ஊடகங்களின் வாயலாக, முல்லைப் பெரியறு போராட்டக் களங்களையும், அணையைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களையும் அவர்கள் காணொளிகளில் பார்த்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க மேற்கொண்ட போராட்டங்கள், தொடர் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் தாயகம் வந்தனர்’’ என்றனர்.

இவர்களை வரவேற்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “கலைஞர் முதல்வராக இருந்தபோது, மதுரை பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் பென்னி குயிக் அவர்களுக்குச் சிலை அமைத்தார்; ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பென்னி குயிக் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டி, அவரது சிலையை நிறுவினார். தேனி பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்டினார்.

எனவே, லண்டன் ஃபிரிம்லேயில் உள்ள பென்னி குயிக் கல்லறையைப் புதுப்பிப்பதற்கும், அங்கே அவருக்கு ஒரு சிலை அமைப்பதற்கும், தேனி பேருந்து நிலையம் முன்பும் ஒரு சிலை நிறுவிடவும் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 7 =

*