;
Athirady Tamil News

வவுனியாவில் கடுகதி புகையிரதத்தை மறித்து மக்கள் போராட்டம்..!! (படங்கள்)

0

வவுனியாவில் கடுகதி புகையிரதத்தை மறித்து மக்கள் போராட்டம்! வன்னி பிரதி பொலிஸ் மா அதிபரின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது!

வவுனியா ஓமந்தை பகுதியில் கடுகதி புகையிரதத்தை மறித்து பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை இன்று (20) காலை 10.00 மணிக்கு நடத்தியிருந்தனர்.

வவுனியா ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் புகையிரதப்பாதையை ஊடறுத்து செல்லும் விளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் வீதியை புகையிரத புனரமைப்பின்போது தடைசெய்து குறுக்காக பயணிகள் மேடை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வீதியை மீண்டும் அமைத்து தருமாறு கோரி அப்பிரதேச மக்கள் புகையிரத மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த கடுகதி புகையிரதமே காலை 10.00 மணிதொடக்கம் மூன்று மணி நேரமாக மக்கள் தடுத்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பொலிசார் போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பல உறுதிமொழிகளை வழங்கி கலைந்து செல்லுமாறு தெரிவித்த நிலையில் விளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் வீதி சம்பந்தமாக பொறுப்புக்கூறும் அதிகாரி வந்து எழுத்துமூலமாக உத்தரவு வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் க.உதயராசா போராட்டக்காரர்களின் பிரச்சனையை கேட்டறிந்துகொண்டார்.

இரண்டு மணிநேரம் கடந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெனாண்டோ வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆறு முறைப்பாடுகள் மேற்கொள்ளுமாறும் சட்டநடவடிக்கையின் ஊடாக தீர்வைப்பெற்றுத்தருவதாகவும் புகையிரம் செல்ல அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

உதவிப்பொலிஸ் அத்தியட்சகரின் வேண்டுகோளை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் தொடர்ந்து புகையிரத மறியலில் ஈடுபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு கலகம் அடக்கும் பொலிசாருடன் வருகை தந்திருந்த வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் எதிர்வரும் திங்கக்கிழமை பிரதெச மக்களை தனது அலுவலகத்தில் சந்திக்கமாறும் தீர்வு பெற்றுத்தருவதாக தெரிவித்தததையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதேச மக்கள்

ஓமந்தை புகையிரதப்பாதையை ஊடறுத்து விளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் பாதையானது 150 வருடங்கள் பாரம்பரியமானது. நல்லாட்சியில் அபிவிருத்தி என்ற போர்வையில் எமது கிராமத்திற்கான பாதை மூடப்பட்டதால் கடந்த ஏழு வருடங்களாக மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். நோயாளிகள் மற்றும் பாடசாலை சிறுவர்கள் பல கிலோமீற்றர் சுற்றியே செல்லவேண்டிய நிலை காணப்படுவதுடன் புகையிரதப்பாதையை துவிச்சக்கர வண்டிகளை கையில் தூக்கிக்கொண்டு கடந்து செல்ல வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*