;
Athirady Tamil News

ஆண்டாள் என் தாய் :வைரமுத்து விளக்கம்..!! (வீடியோ)

0

ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதிய கட்டுரையும், பேச்சும் ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளது. வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என ஒருபுறம் அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ் படைப்பாளிகள் பலர் அவருக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். இப்பிரச்சினை குறித்து “யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருந்த வைரமுத்துவிடம் இருந்து அதன்பின்னர் எந்த பதிலும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் இன்று அவர் இப்பிரச்சினை குறித்த தனது விளக்கத்தை பேசி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “என் மனம் உடைக்கப்பட்டுக்கிடக்கிறது. ஆண்டாளின் புகழ் பாட நான் ஆசைபட்டது தவறா? மூன்று மாதங்கள் நான் ஆண்டாளை ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை எழுதியது தவறா? ஸ்ரீவில்லிபுத்தூரில் அவள் பிறந்த மண்ணில் நான் ஆசை ஆசையாக ஓசையுடன் பேசியது தவறா? இது ஆண்டாளைப்பற்றி மட்டும் எழுதிய கட்டுரைத் தொடர் அல்ல. மூவாயிரம் ஆண்டு தமிழுக்கு தடம் சமைத்தவர்களை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக பருந்துப்பார்வையில் ஆய்வு செய்துள்ளேன். திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், திருமூலர், அப்பர், வள்ளலார், உ.வே.சா, பாரதியார், பாரதி தாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என பரந்து கிடக்கிறது அந்த வெளி. நாற்பதாண்டுகளாக என் நெஞ்சில் குலவியட்டு கும்மியடித்துக்கொண்டிருக்கும் குரல் ஆண்டாளின் குரல். அவள் பாசுரங்களை பாடப்பாட பக்தி இல்லாத எனக்கு சக்தி பிறக்கிறது. தமிழ் பிறக்கிறது. என் ஆண்டாளின் பெருமைகளையெல்லாம் உவந்து சொன்னேன். தமிழ் வெளியில் கேட்ட முதல் விடுதலைப் பெண் குரல் ஆண்டாள் குரல். என் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கும் உரிமை என்னுடையது என்று கூறியவள் என்று கூறினேன்”.

“அவளை சமூகவியல் பார்வையில் பார்த்தேன், சமயப்பார்வையில் பார்த்தேன். அந்த காலப்பின்னணியில் பார்த்தேன். பல்வேறு ஆய்வாளர்களின் மேற்கோளை காட்டினேன். இறுதியில் சமூகவியல் பார்வையில் பார்க்கப்பட்ட 86 வயது இந்தியப் பேராசிரியர் எழுதிய ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டினேன். அவர்களும் மொழியை மிகவும் கவனமாக கையாண்டு ஆண்டாள் புகழ் பாடியுள்ளனர். அது பிழையாகாத போது அந்த கட்டுரையை மேற்கோள் காட்டிய நான் மட்டும் பிழையாவேனா? ஒருவேளை அந்த வாசகம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தான் பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் பதிவு செய்தேன். அது என் கருத்து அல்ல. அதை எழுதிய கேசவன், நாராயணன் இருவரின் கருத்து.”

“ஆண்டாள் எனக்கும் தாய். என்னை பெற்ற தாய் அங்கம்மாள். ஆண்டாள் நான் கற்ற தாய். அவள் தமிழச்சி. இரண்டு தாயார்களையும் ஒரே நிலையில் பார்க்கும் என்னை தமிழ் சமூகம் சந்தேகப்படலாமா? ஆண்டாளை நான் குற்றம் சொல்வதாக இருந்தால் அதை அவள் பிறந்த மண்ணில் சென்று அதை அரங்கேற்றியிருப்பேனா?”

“மதம் கலந்த அரசியலுக்காகவோ அல்லது அரசியல் கலந்த மதத்திற்காகவோ யாரோ திரித்து பரப்பிவிட்டார்கள். தேவதாசி என்ற சொல்லில் தேவ என்ற வார்த்தையை ரகசியமாக கத்தரித்துவிட்டு தாசி என்றார்கள். பின் தாசியை வேசி என்று பேசினார்கள். இதனால் எனக்கு ஏற்பட்ட இழிவுகள் ஏராளம். இப்படிப்பட்ட கூட்டத்தில் நான் தமிழ் வளர்க்க வேண்டுமே என்று வெட்கப்படுகிறேன். நான் என் வருத்தத்தை தெரிவித்துவிட்டேன். தினமணியும் வருத்தம் தெரிவித்துவிட்டது. இதன் பின்னரும் மதக்கலவரத்தை இனக்கலவரத்தை தூண்டபார்க்கிறார்கள் என்றால் தமிழ் சமூகமே நீ ஞான சமூகம். நீ புரிந்துகொள்வாய். நன்றி வணக்கம்” என்று தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + eight =

*