;
Athirady Tamil News

தமிழ்ப் பிரதிநிதிகள் நாடாளுமன்றில் வாய் கட்டப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர்: விஜயகலா..!! (வீடியோ)

0

முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்றபோது, நாடாளுமன்றில் வாய் மூடியிருந்தவர்கள் தற்போது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க போவதாக கூறுவதை ஏற்க முடியாது என சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சரும், ஐ.தே.க.வின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று சனிக்கிழமை வெளியிட்டுவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்றபோது 22 தமிழ் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள். அவர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிடுகின்றனர். அன்று முல்லைத்தீவு படுகொலை இடம்பெற்றபோது நாடாளுமன்றில் வாய்மூடியிருந்தவர்கள், இன்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க போவதாகக் கூறுகின்றனர்.

அன்று மாத்திரமின்றி இன்றும் அவர்கள் வாய்க்கட்டப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினர் குரல் கொடுப்பதை சிறுபான்மை பிரதிநிதிகள் வாய்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டு மாத்திரமே உள்ளனர்.

இவ்வாறானவர்களா உங்களுக்கான அபிவிருத்தியை செய்யப் போகிறார்கள்? இவர்களா இளைஞர்கள் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்க போகிறார்கள்?, இவர்களா எமக்கான தீர்வை பெற்றுத்தரப் போகிறார்கள்?

எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் ஆணையை வழங்கும்போது நன்கு சிந்திக்க வேண்டும். ஏனெனில் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலம்தான் எமது எதிர்காலத்தை தக்க வைக்க முடியும். எனவே, இனவாதமற்ற தலைவரை கொண்ட ஐக்கிய தேசிய கட்சிக்கு உங்கள் ஆணையை வழங்க வேண்டும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + eighteen =

*