;
Athirady Tamil News

நீதிபதி லோயா மரணத்துக்கு சிறப்பு விசாரணை கோரும் மனு – சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரணை..!!

0

பா.ஜனதா தலைவர் அமித் ஷா மீதான சொராபுதின் ஷேக் போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரும் மனு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.

குஜராத் மாநிலத்தில், பயங்கரவாதி என கருதப்பட்ட சொராபுதின் ஷேக் உள்பட 3 பேர் கடந்த 2005-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது, போலி என்கவுண்ட்டர் என்று சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக, அப்போதைய குஜராத் உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி பி.எச்.லோயா இவ்வழக்கை விசாரித்து வந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு, நீதிபதி லோயா, மராட்டிய மாநிலம் நாக்பூரில் திடீரென காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சொராபுதின் வழக்குக்கும், அவரது மரணத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் நீதிபதி குடும்பத்தினர் சமீபத்தில் சந்தேகம் தெரிவித்தனர்.

இதையடுத்து, நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, அனிதா ஷெனாய், தெசீன் பூனவாலா, பந்துராஜ் சம்பாஜி லோன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், சமீபத்தில் தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய 4 நீதிபதிகளும், தங்கள் பேட்டியின்போது, ஜூனியர் நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு இத்தகைய முக்கியமான வழக்கை ஒதுக்கியது ஏன்? என்று ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதனால், இம்மனுக்களை உரிய அமர்வு விசாரிக்கும் என்று அருண் மிஸ்ரா அமர்வு கூறியது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு இந்த மனுக்கள் மாற்றப்பட்டுள்ளன. அந்த அமர்வு முன்பு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரும் வகையில், அவை பட்டியலிடப்பட்டு உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*