;
Athirady Tamil News

பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகும் பட்ஜெட்டில் கவர்ச்சி அறிவிப்புகள் இருக்காது: பிரதமர் மோடி சூசக தகவல்..!!

0

மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்காது என்று பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்தல் வர இருப்பதால், 2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்படுமா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

இது பற்றிய பிரச்சினைகள் நிதி மந்திரியின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை ஆகும் என்பதால், அதில் நான் தலையிட விரும்பவில்லை. முன்பு குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த போதும், தற்போது பிரதமராக இருப்பதாலும் நான் சில விஷயங்களை அறிந்து இருக்கிறேன்.

சாமானிய மக்கள் நேர்மையான, திறமையான அரசாங்கத்தைத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் இலவசங்களையும், சலுகைகளையும் எதிர்பார்க்கவில்லை. அப்படி அவர்கள் எதிர்பார்ப்பதாக கூறுவதெல்லாம் வெறும் கட்டுக்கதை. சமானிய மக்களின் விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்ற எனது அரசாங்கம் உறுதிபூண்டு இருக்கிறது.

இவ்வாறு மோடி கூறினார்.

இதன்மூலம் மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்காது என்பதை அவர் சூசகமாக தெரிவித்து உள்ளார்.

பேட்டியின் போது அவர் தொடர்ந்து கூறியதாவது:-

நாட்டில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

மத்திய அரசின் கொள்கைகள் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறேன். இது தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

அரசின் கொள்கைகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைந்து உள்ளன. குறிப்பாக ஜவுளி, தோல் தொழில் ஆகிய துறைகளில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அரசின் கொள்கைகள் உள்ளன. பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் அல்லாத சிறு தொழில்களுக்கு ரூ.10 கோடி கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் புதிதாக தொழில் முனைவோர் உருவாகி இருக்கிறார்கள். வேலைவாய்ப்புகளும் அதிகரித்து உள்ளன.

மத்திய அரசு கடந்த 1½ ஆண்டுகளில் மின்சாரமே கிடைக்காத 4 கோடி குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கி உள்ளது. மேலும் 3.3 கோடி குடும்பத்தினருக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஏழை மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர்.

பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து சிலர் கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்றனர். மக்களிடம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் முயற்சி மேற்கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டையும் நாடினர். கருப்பு பணம், ஊழல், நேர்மை இல்லாதவர்களுக்கு அவர்கள் துணை போக முயற்சி செய்தனர். ஆனால் இத்தனை சோதனைகளையும் தாண்டி மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து உள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் வணிக தரவரிசையில் இந்தியா 42-வது இடத்துக்கு முன்னேறியது. இது இந்த அரசின் பெரும் சாதனை ஆகும்.

கடந்த 3 ஆண்டுகளில் பயனற்ற 1,400 சட்டங்கள் நீக்கப்பட்டன. அதற்கு பதிலாக மக்களின் நலனுக்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசை விட தற்போதைய அரசு திறம்பட செயல்பட்டு வருவதை மக்கள் உணர்ந்து உள்ளனர்.

ஜி.எஸ்.டி. கூட ஒரு புதிய திட்டம் தான். இந்த புதிய திட்டத்துக்கு ஏற்ப மக்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொள்ள சிறிது காலம் ஆகும். இதில் உள்ள ஓட்டைகளை அடைத்து மேம்படுத்தி வருகிறோம். ஒரு திறமையான திட்டத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த முயற்சி தேவை. அதற்கு 6 மாதங்களும் ஆகலாம், 2 வருடங்களும் ஆகலாம்.

ஆட்சியில் முன்பு இருந்தவர்கள் இப்போது ஜி.எஸ். டி.யை எதிர்க்கிறார்கள், நேர்மையற்ற முறையில் பேசுகிறார்கள். இதன்மூலம் அவர்கள் ஜனநாயகத்தின் கோவிலான ஒட்டுமொத்த பாராளுமன்றத்தையே அவமதிக்கிறார்கள். இது அவர்களுக்கு பொருத்தமல்ல.

குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது நான் கூறிய ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற சுலோகத்தின் அர்த்தம், அரசியல்ரீதியாக முக்கிய எதிர்க்கட்சியை அழித்துவிட வேண்டும் என்பது அல்ல. நாட்டின் அரசியல் கட்சிகளில் காங்கிரஸ் ஒரு முக்கிய தூண். ஜாதிரீதியான, பரம்பரையாக, ஊழல் நிறைந்த, ஒட்டுமொத்த அதிகார கட்டுப்பாடு என்ற சில ‘காங்கிரஸ் கலாசாரம்’ உள்ளது.

அந்த கலாசாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பரப்புகிறது. டெல்லி மேல்-சபையில் வாக்கு வங்கி அரசியலுக்காக முத்தலாக் சட்டமசோதாவை காங்கிரஸ் எதிர்த்தது. இந்த பிற்போக்கான எண்ணத்தில் இருந்து காங்கிரஸ் வெளியே வரவேண்டும். அரசியல் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்துபோனால், அவர்களால் பெண்கள் மேம்பாடு என்ற கண்ணோட்டத்தில் பாராளுமன்றம், சட்டமன்றங்களில் பார்க்க முடியாது.

காங்கிரசின் இந்த கலாசாரம் நாட்டின் சுதந்திரத்துக்கு பின்னரே வெளிப்பட்டது. இவை இப்போது இந்திய அரசியல் கலாசாரத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இதில் முக்கிய தூணாக காங்கிரஸ் உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியே அந்த கலாசாரத்தில் இருந்து வெளியே வரவேண்டும்.

சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் ஒதுங்கி இருக்க வேண்டும். நீதிபதிகள் அமர்ந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன். நமது நீதித்துறை மிகப்பழமையான வரலாற்றை கொண்டது. அதில் திறமையானவர்கள் பலர் இருக்கிறார்கள்.

நீதித்துறை மீது எனக்கு முழுநம்பிக்கை இருக்கிறது. எனவே இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதை போல, ஆட்சியாளர்களும் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பாகிஸ்தானை உலகநாடுகளில் இருந்து தனிமைப்படுத்த நாங்கள் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டுகிறார்கள். பாகிஸ்தானை தனிமைப்படுத்த விரும்பவில்லை. தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைக்கத்தான் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

இந்த நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரவாதத்துக்கு எதிராக குரல் எழுப்பி இருப்பது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*