;
Athirady Tamil News

21 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்..!! (வீடியோ)

0

சென்னை கந்தசாமி கல்லூரியில் பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் அம்மா அரங்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் 21 ஜோடிகளுக்கு இலவச திருமணங்களை நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

30 மாவட்டங்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள் நடத்தப்பட்டு, அந்தந்த மாவட்ட மக்களுக்கு நன்மை பயக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு, அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் வருங்காலமாக விளங்கும் பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட அம்மா, பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கி வந்த 2 இணை சீருடையை 4 இணையாக உயர்த்தியும், புத்தகங்கள், கணித உபகரணங்கள், மிதி வண்டிகள் உட்பட பல்வேறு விலையில்லாப் பொருட்களையும், அறிவியல் அறிவு மேம்படுத்திக் கொள்ள அவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியும் வழங்கினார்.

தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி, 2வது பசுமைப் புரட்சிக்கு சிறப்பு வேளாண் தொகுப்புத் திட்டம், அதிக அளவில் பால் கொள்முதல் செய்து வெண்மைப் புரட்சி, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் விலையில்லா கறவை மாடுகள், 4 ஆடுகள் வழங்கும் திட்டம், பெண்களின் வேலைப் பளுவினைக் குறைக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களால் தமிழ்நாட்டில் சமூகப் பொருளாதார புரட்சி ஏற்படுத்தியதோடு, பிற மாநிலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுத்தினார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் பள்ளிக்கல்வி துறைக்கு நிதி ஒதுக்கீடு சுமார் 1 லட்சத்து 37 ஆயிரத்து 261 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரசு 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 3 பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றை நிறுவியுள்ளது.

இன்று திருமணம் காணும் மணமக்கள் அனைவரும் தங்களது இல்லற வாழ்வில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, சீரும், சிறப்பாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு உதாரணமாக பெருவாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*