;
Athirady Tamil News

8,500 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது..!!

0

ரெயில்வே துறைக்கு இது வரை தனி பட்ஜெட் போடப்பட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

தற்போது மத்தியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ரெயில்வே தனி பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்து உள்ளது.

இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி மாதம் 1-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இதில் ரெயில்வே துறையில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் உள்ள ரெயில் நிலையங்கள் பாதுகாப்பற்றதாக உள்ளன. நகரின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் வேலைக்கு செல்வதற்காக ரெயில் ஏற வந்த இளம் பெண் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த ரெயில் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படாததால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். கடைசியில் தனியார் வீடுகள், கட்டிடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் துப்பு துலங்கியது.

இது போல் பல ரெயில் கொள்ளைகளிலும் துப்பு துலங்காமல் உள்ளது. கண்காணிப்பு கேமிராக்கள் இல்லாததால் பெண் பயணிகளிடம் ஈவ்டீசிங், திருட்டு போன்ற குற்றங்களும் நடைபெறுகிறது. இது போன்ற குற்றங்களை கண்காணிப்பு கேமரா பொருத்தினால் தடுக்க முடியும்.

எனவே குற்றங்களை தடுக்கவும், குற்றங்களில் உடனுக்குடன் துப்பு துலக்க வும் நாடு முழுவதும் ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் சுமார் 395 ரெயில் நிலையங்கள், 50 ரெயில்களில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளது. இதை மேலும் விரிவுபடுத்த ரெயில்வே இலாகா முடிவு செய்துள்ளது.

நடப்பு ஆண்டில் 11,000 ரெயில்கள் மற்றும் 8,500 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. ரெயில்களில் ஒரு பெட்டியில் மட்டும் 8 கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 12 லட்சம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்றும் அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ், சொகுசு ரெயில்களிலும், நவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு அதிக அளவிலான ரெயில் விபத்துகள் நடந்ததால் அதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு அதிக அளவிலான நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்புக்கு மட்டும் ரூ.3 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்தப்பணிகள் நிறைவேற்றப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 16 =

*