கால்நடைத் தீவன ஊழல்: மூன்றாவது வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி என அறிவிப்பு..!! (வீடியோ)

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை தீவன ஊழல் தொடர்பாக முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் மற்றும் மேலும் சிலருக்கு எதிராக மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில், இரண்டு வழக்குகளில் லாலு பிரசாத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சாய்பாஸா மாவட்டத்தில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து ரூ.33.67 கோடி பணம் எடுத்த வழக்கு, டோரன்டா மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து ரூ.184 கோடி பணம் எடுத்த வழக்கு, தும்கா மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து ரூ.3.97 கோடி பணம் எடுத்த வழக்கு ஆகிய மூன்று வழக்குகளில் விசாரணை நடைபெற்று வந்தது.
இவற்றில், சாய்பாஸா மாவட்டத்தில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து ரூ.33.67 கோடி பணம் எடுத்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்தது. இதையடுத்து, இவ்வழக்கின் தீர்ப்பு ஜனவரி 24-ம் தேதி வெளியிடப்படும் என இவ்வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் சமீபத்தில் அறிவித்தார்.
அதன்படி இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி, இவ்வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி என அறிவித்தார். பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ராவும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டு வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள லாலு தற்போது மிர்சா முண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.