;
Athirady Tamil News

திருஷ்டி சுற்றியபோது பரிதாபம்: ஒரு மாத குழந்தை தீயில் கருகி பலி..!!!

0

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள பூகான ஹள்ளியை சேர்ந்தவர் சிவபிரகாசம். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி உமா.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த உமாவுக்கு கடந்த மாதம் ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த குழந்தைக்கு ஜெயந்த்குமார் என பெயர் வைத்தனர்.

நேற்று முன்தினம் தாய் உமா தனது குழந்தை ஜெயந்த்குமாரை கையில் வைத்தப்படி கற்பூரம் கொண்டு திருஷ்டி சுற்றியபோது அதில் ஒரு துண்டு கற்பூரம் தவறி குழந்தையின் துணியில் விழுந்து விட்டது.

இதை கவனிக்காத உமா குழந்தையுடன் வீட்டின் வெளியே வாசல்படிக்கு சென்று திருஷ்டி சுற்றிய கற்பூரத்தை அங்கு கொட்டி தீயை பற்ற வைத்தார். அப்போது தீ வேகமாக எரிந்து குழந்தையை வைத்திருந்த துணியில் பிடித்து விட்டது. உமா தீயை அணைக்க முயற்சி செய்வதற்குள் மளமளவென தீ பரவி குழந்தையின் உடல் முழுவதும் கருகியது.

இதனால் உமா, கதறி அழுதபடி தனது குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து பார்த்தும் குழந்தை உடலில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் டாக்டர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரை செய்தனர். இதையடுத்து இரவு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 12 =

*