;
Athirady Tamil News

உள்ளுராட்சி தேர்தல் விவகாரத்தில் எந்த அரசியல்வாதிகளுக்கும் நாங்கள் ஆதரவு இல்லை! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி..!!

0

உள்ளுராட்சி தேர்தல் விவகாரத்தில் எந்த அரசியல்வாதிகளுக்கும் நாங்கள் ஆதரவு இல்லை! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி!

தமிழ் அரசியல்வாதிகளை துரோகிகளாகவே பார்க்கிறோம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என பதில் கூறுமாறு இலங்கை அரசுக்கு எதிராக வவுனியாவில் முன்னெடுக்கபட்டுவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் (24) 335 வது நாளை எட்டியுள்ள நிலையில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடிக் கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.

வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக 335 வது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுத்து வருகிறோம். 2017-01-23 அன்று எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது பதில் கூறு என அரசுக்கு கோரிக்கை விடுத்து 14 தாய்மார்களுடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்தோம்.

அதன் ஒருவருட பூர்த்தியை நினைவு கூறுமுகமாகவே நேற்று (23) கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுடிருந்தோம்.

சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோதும் எமது பிள்ளைகள் குறித்து விரைவில் பதில் தருவதாக கூறி எமது உண்ணாவிரத்ததை நிறுத்திய அரசு தீர்வு எதனையும் தரவில்லை.

அதனைத் தொடர்ந்து ஐந்து மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக போராட்டம் மேற்கொண்டு வருகிறோம். அந்தவகையில் வவுனியாவில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப்போராட்டம்
ஆரம்பித்து 335 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து கொண்டிருக்கும் எமது போராட்டத்திற்கு சர்வதேச நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீர்வுகளை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். எங்கள் பிள்ளைகள் தொடர்பாக சர்வதேசம் தலையிட்டு பதில் கூறும் என்ற நம்பிக்கையில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இலங்கை அரசு எங்களுக்கு எந்தவிதமான பதிலையும் வழங்காத நிலையில் சர்வதேச நாடகளின் பிரதிநிதிகள் எங்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியின் பயனாக நிச்சமாக எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

போராட்ட காலம் இரண்டு வருடம் நீடித்தாலும் நாங்கள் கவலை கொள்ள போவதில்லை காரணம் எமது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய நிலையில் ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளது.

இப்போது எமது மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் ஈடுபட்டுள்ளார்கள். அரசியல் சம்பந்தமாக நாங்கள் யாருக்கும் சார்பாக செயற்படமாட்டோம். காரணம் நாங்கள் அனைத்து அரசியல்வாதிகளையும் முழுமையாக எதிர்த்துத்தான் தனித்துவமாக இப்போராட்டத்தை நடத்திவருகிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தனாக இருந்தாலும் சரி சுமந்திரனாக இருந்தாலும் சரி காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் விவகாரத்தில் துரோகிகளாகவே பார்க்கிறோம். தேர்தல் விவகாரத்தில் எந்த அரசியல்வாதிகளுக்கும் நாங்கள் ஆதரவு இல்லை என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*