;
Athirady Tamil News

பழனி கோவிலுக்குள் கந்து வட்டியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..!!

0

பழனி அடிவாரம் அருள்ஜோதி வீதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. அவரது மகன் வேலுச்சாமி (வயது 32). மாற்றுத்திறனாளியான இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை. இவருக்கு சீத்தாலெட்சுமி, தனலெட்சுமி, ஜெயலெட்சுமி, சந்திரா ஆகிய 4 சகோதரிகள் உள்ளனர்.

ஜெயலட்சுமிக்கும் பெரிய குளத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மற்றவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. எனவே அவர் கணவரை விட்டு பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இதனால் வேலுச்சாமி தனது சகோதரிகளுக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லையே என்ற மனவேதனையில் இருந்தார். இந்த வேதனையை எடுத்துரைப்பதற்காக வேலுச்சாமி குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரிய ஆவுடையார் கோவிலுக்கு அடிக்கடி வருவது வழக்கம்.

அதன்படி நேற்று வேலுச்சாமி, தனது சகோதரிகள் சந்திரா, ஜெயலட்சுமி ஆகியோருடன் கோவிலுக்கு வந்தார். அவர்கள் 3 பேரும் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தனர் சிறிது நேரத்தில் அவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பக்தர்கள், 3 பேரும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு சில பக்தர்கள் 3 பேரையும் தட்டி எழுப்பி பார்த்த போது பேச்சு மூச்சின்றி கிடந்தனர். இது குறித்து உடனடியாக கோவில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். அப்போது வேலுச்சாமி தனது சகோதரிகள் 2 பேருடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருந்தது தெரிய வந்தது இந்த தகவல் பழனி தாலுகா போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாரணையில் போலீசார் இறங்கினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. வேலுச்சாமி, தனது தந்தை கந்தசாமி உதவியுடன் வீடு கட்டுவதற்காக அக்கம் பக்கம் உள்ள சிலரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து வட்டி கேட்டு நெருக்கினர். இதனால் வீடு கட்டுவதை பாதியில் வேலுச்சாமி நிறுத்தி விட்டார். தொடர்ந்து கடன் காரர்கள் நச்சரித்ததால் வேலுச்சாமி இந்த முடிவை எடுத்துள்ளார். தனது முடிவை தனது சகோதரிகள் சந்திரா, ஜெயலட்சுமி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் இதற்கு சம்மதித்து வி‌ஷம் குடித்து 3 பேரும் உயிரை மாய்த்துள்ளனர். மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + eighteen =

*