;
Athirady Tamil News

உ.பி. எம்.பி. இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிட வேண்டும்: மாநில காங்கிரஸ் விருப்பம்..!!

0

பாராளுமன்றத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது, உத்தரபிரதேச மாநிலம் பல்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கேசவ் பிரசாத் மவுரியா வெற்றி பெற்றார்.

கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்- மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் பல்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே கோரக்பூர் எம்.பி. தொகுதி இடம் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விலகிய காரணத்தால் காலியாக உள்ளது. எனவே கோரக்பூர், பல்பூர் இரு பாராளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. இந்த இரு தொகுதிகளும் முதல்வர், துணை முதல்வர் இருவரும் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், அந்த இரு தொகுதிகளிலும் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிடம் மிகவும் தீவிரமாக உள்ளது.

இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் வருகிற மார்ச் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தல் பா.ஜ.க. அரசு மீது உத்தரபிரதேச மாநில மக்கள் தற்போது எத்தகைய மனநிலையில் உள்ளனர் என்பதை காட்டும் கண்ணாடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

கோரக்பூர், பல்பூர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க.வை வெற்றி பெற விடக்கூடாது என்பதில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரமாக உள்ளன. இந்த இரு தொகுதி இடைத் தேர்தலை மின்னணு எந்திரம் மூலம் நடத்தாமல் வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்று இந்த கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

இரு தொகுதிகளில் பல்பூர் தொகுதி பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதியாகும். அந்த தொகுதியை பா.ஜ.க.விடம் இழந்தை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஜீரணிக்க முடியாதபடி இருந்தனர். தற்போது இடைத் தேர்தல் வருவதால் பல்பூர் தொகுதியை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

இதற்கிடையே உத்தரபிர தேசமாநில காங்கிரஸ் தலைவர்கள், பல்பூர் தொகுதி வெற்றிக்காக புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளனர். அந்த தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை களம் இறக்க வேண்டும் என்பதே அவர்கள் வியூகமாகும். இதை வலியுறுத்தி அவர்கள் ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கிஷோர் கூறுகையில், “பல் பூரில் பிரியங்கா போட்டியிட்டால் காங்கிரஸ் நிச்சயம் அமோக வெற்றி பெறும். எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியையும் உருவாக்க முடியும்” என்றார்.

ஆனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் யாரும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + six =

*