;
Athirady Tamil News

செம்மரக்கடத்தல் வழக்கில் கைதான தி.மு.க. பிரமுகர் கடப்பா ஜெயிலில் அடைப்பு..!!

0

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வருபவர் பாபு (வயது 48). இவரை கடந்த 22-ந் தேதி முதல் காணவில்லை என்று அவரது மனைவி பிரேமலதா அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தார். அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பாபுவின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கினர். அதில் பாபு செல்போன் எண்ணின் சிக்னல் ஆந்திர மாநிலம் சித்தூரில் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சித்தூர் விரைந்தனர். சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று பாபு மாயமானது குறித்து சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் கேட்டனர்.

அப்போது அவர், பாபு கடத்தப்படவில்லை என்றும் கடப்பா மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார். இதையடுத்து அணைக்கட்டு போலீசார் கடப்பா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று சூப்பிரண்டு பாபுஜியை தொடர்பு கொண்டு பாபு மாயமானது குறித்து தெரிவித்தனர்.

அப்போது சூப்பிரண்டு பாபுஜி, பாபு கைது செய்யப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். அவருடன் சுதாகர், சத்யா, முன்னா, ஐதர்அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கடப்பா போலீஸ் சூப்பிரண்டு பாபுஜி கூறியதாவது:-

சம்பவத்தன்று பாபு அணைக்கட்டு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது செம்மரக்கடத்தல் வழக்கு தொடர்பாக கடப்பா போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து இங்கு (கடப்பா) கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டோம்.

விசாரணையில் பாபு பல்வேறு செம்மரக்கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் இதுவரை 500 டன் செம்மரக்கட்டைகளை கடத்தி உள்ளார்.

மேலும் அவரிடம் இருந்து ரூ.1½ கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள், 3 சொகுசு கார்கள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாபுவிற்கு ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள செம்மரக்கடத்தல்காரர்களுடன் தொடர்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட பாபு மற்றும் 4 பேர் ஆந்திர மாநிலம் கடப்பா ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

செம்மரக் கடத்தல் வழக்கில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து கடப்பா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 2 =

*