;
Athirady Tamil News

ஆதார் கார்டு குளறுபடி: ரே‌ஷன் பொருட்கள் கிடைக்காததால் ஜார்கண்டில் பெண் உயிரிழப்பு..!!

0

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதார் கார்டு இல்லை என்றால் அவர்களுக்கு ரே‌ஷன் கடைகளில் உணவு பொருட்கள் வழங்குவதில்லை என்ற நடைமுறை உள்ளது.

இதன் காரணமாக பலருக்கு ரே‌ஷன் பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 4 மாதத்தில் மட்டும் 6 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இப்போது ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அங்களுள்ள பகூர் மாவட்டத்தில் உள்ள துவடாங்கள் என்ற கிராமத்தை சேர்ந்த பெண் லுக்கிமுர்மு (வயது 32). இவருக்கு பூலின்முர்மு என்ற சகோதரி இருக்கிறார். இவர்களின் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர்.

இவர்களது பாட்டிதான் இருவரையும் வளர்த்து வந்தார். தற்போது பாட்டிக்கும் வயதாகிவிட்டது. லுக்கிமுர்மு கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.

வேறு எந்த வருமானமும் வீட்டில் இல்லை. ரே‌ஷன் கடையில் கிடைக்கும் பொருட்களை வாங்கிதான் ஏற்கனவே சாப்பிட்டு வந்தனர். ஆதார் கார்டில் பூலின்முர்முவின் கைரேகை சரியாக அமையவில்லை. இதனால் ரே‌ஷன் கடைக்கு சென்றபோது அவரது ஆதார் கார்டை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதன் காரணமாக 4 மாதமாக அவர்களுக்கு ரே‌ஷன் கடையில் உணவு பொருட்கள் வழங்கப்படவில்லை. ஒரு மாதமாக வேலைக்கு செல்லாததால் வெளியே உணவு பொருட்கள் வாங்குவதற்கு பணமும் இல்லை. எனவே வீட்டில் உள்ள அனைவரும் பட்டினி கிடந்தனர்.

லுக்கிமுர்மு பட்டினி கிடந்ததால் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் லூயிசா கெம்ரூன் கூறும்போது, லுக்கிமுர்மு பட்டினியால்தான் உயிரிழந்தார். அவர் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாலும், அதே நேரத்தில் சாப்பிடாமல் இருந்ததாலும் இறந்துவிட்டார் என்று கூறினார்.

ஆனால் இதை மாவட்ட வழங்கல் அதிகாரி திலீப் குமார் மறுத்துள்ளார். நாங்கள் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தோம். அவர்களது வீட்டில் அரிசி இருந்தது. சொந்தமாக மாடு ஒன்றும் இருந்தது. மேலும் 3 ஏக்கர் நிலமும் அவர்களுக்கு இருக்கிறது. எனவே அவர் பட்டினியால் சாகவில்லை என்று கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − five =

*