;
Athirady Tamil News

கர்நாடகா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்- கருத்து கணிப்பில் தகவல்..!!

0

கர்நாடகா மாநில சட்டசபைக்கு இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

மார்ச் மாதம் தேர்தல் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் தற்போது சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சிகளை கடந்த ஆண்டே தொடங்கி விட்டது.

ஆனால் ஆட்சியை பறிக்க பா.ஜ.க. மேலிடமும் புதிய வியூகங்களை வகுத்து செயல்பட தொடங்கி உள்ளது. பா.ஜ.க. தலைவர்கள் 3 மாதத்திற்கு முன்பு யாத்திரையை நடத்தி பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

இதனால் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் – பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்று ஒரு தனியார் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

அதில் தற்போது தேர்தல் நடந்தால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரசுக்கு வாக்களிப்போம் என்று 49 சதவீதம் பேர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்போம் 27 சதவீதம் பேர்தான் சொல்லி உள்ளனர். அதுபோல தேவேகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு வாக்களிப்போம் என்று 20 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

பா.ஜ.க.- மதசார்பற்ற ஜனதா தளம் இரு கட்சிகளுக்கும் கிடைத்துள்ள மக்களின் ஆதரவு சதவீதத்தை விட காங்கிரஸ் கட்சிக்கு அதிக சதவீத ஆதரவு கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ்தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பு முடிவுகள் கர்நாடக பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதா கட்சிக்கு செல்வாக்கை மீண்டும் ஏற்படுத்த பா.ஜ.க. மேலிட தலைவர்கள் கடந்த சில மாதங்களாக புதிய திட்டங்களை அறிவித்த படி உள்ளனர். ஆனாலும் பா.ஜ.க.வின் செல்வாக்கில் தொடர்ந்து வீழ்ச்சியே ஏற்பட்டு உள்ளது.

தற்போது பாராளுமன்ற தேர்தல் நடந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று மற்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 47 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சிக்குதான் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர்.

முதல்-மந்திரியாக யாரை தேர்வு செய்ய விரும்புகிறீர்கள் என்று கருத்து கணிப்பில் இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கர்நாடகா மக்கள் பெரும்பாலானோர் தேர்வு சித்தராமையாவுக்கு உள்ளது. அவருக்கு 34 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என்று குமாரசாமியை 19 சதவீதம் பேர் தேர்வு செய்துள்ளனர். பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவுக்கு இதில் 3-வது இடம்தான் கிடைத்துள்ளது. அவர் முதல்வராக 14 சதவீதம் பேர் தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + ten =

*