;
Athirady Tamil News

திருத்தணி கோவிலில் குரங்குகள் தாக்கியதில் பெண்-முதியவர் பலி: பக்தர்கள் அதிர்ச்சி..!!

0

பெங்களூரை சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி நளினி (வயது 40).நேற்று இவர்கள் இருவரும் உறவினர்களுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

மலைக்கோவில், தேர் வீதியில் பூஜைக்கு தேவையான பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் சென்றனர்.

அப்போது பூஜை பொருட்களை வைத்திருந்த நளினியை அங்கிருந்த குரங்குகள் கூட்டம் தாக்கியது. அவரிடம் இருந்த பழங்களை பறித்தன. இதில் அதிர்ச்சி அடைந்த நளினி ஓடிய போது தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது நளினி ஏற்கனவே இறந்து இருப்பது தெரிந்தது.

இதேபோல் நேற்று மாலை 53 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கோவிலுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்தார்.

அவரையும் குரங்குகள் விரட்டி பூஜை பொருட்களை பறித்தது. இதில் நிலை தடுமாறி விழுந்ததில் முதியவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இது குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருத்தணி கோவிலில் குரங்குகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தினந்தோறும் குரங்குகளின் தாக்குதலில், பக்தர்கள் பலர் காயம் அடையும் சம்பவம் நடந்து வருகிறது.

தற்போது 2 பேர் பலியான சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோவிலில் உள்ள குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − fifteen =

*