;
Athirady Tamil News

இரட்டை ரெயில் பாதை பணி இந்த ஆண்டு நிறைவடையும்: தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தகவல்..!!

0

சென்னை அயனாவரத்தில் உள்ள ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரஸ்தா தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ரெயில்வே பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை தெற்கு ரெயில்வேக்கு ரூ.5 ஆயிரத்து 422 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 63 சதவீதம் (1974 ரெயில்கள்) இயக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 270 சிறப்பு ரெயில்கள் கோடை விடுமுறைக்காக இயக்கப்பட இருக்கிறது.

பயணிகளின் வசதிக்காக 23 ரெயில் நிலைங்களில் அவசர சிகிச்சை மையமும், 6 ரெயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையமும், 71 ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையமும், 23 ரெயில் நிலையங்களில் இலவச ‘வை-பை’ வசதியும், தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் 61 ‘லிப்ட்’ மற்றும் 84 நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸில் கூடுதலாக 2 அனுபூதி பெட்டிகள் பயணிகளின் சொகுசு வசதிக்காக இணைக்கப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வேயில் இதுவரை 12 ரெயில்களில் எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் சில ரெயில்களும் எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்படும். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து ரெயில்களிலும் ‘பயோ-டாய்லட்’ வசதி பொருத்தப்படும்.

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 15 மேம்பாலங்கள் அமைத்து பொது மக்கள் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட 14 முக்கிய ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் ‘நிர்பையா’ நிதி மூலம் புறநகர் ரெயில் நிலையம் உள்பட 136 ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும். இதன் முதற்கட்டமாக நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சென்னை-மதுரை இடையில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி முழுமையாக முடிக்கப்படும். மேலும் மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சி-நெல்லை-நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம்-கன்னியாகுமரி ஆகிய ரெயில் நிலையங்களை இரட்டை ரெயில் பாதையாக மற்றும் மின்சாரமயமாக்கும் திட்டம் ஒப்புதல் பெறப்பட்டு கடந்த 23-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிக்கு தெற்கு ரெயில்வே இதுவரை ரூ.299 கோடியும், புதிய ரெயில் பாதை அமைக்க ரூ.52 கோடியும், ரெயில் நிலையத்தில் மேம்பாலங்கள் அமைக்க ரூ.201 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + twenty =

*