;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (27.01.2018)

0

இந்தியாவுக்கு ஏற்ற விதத்தில் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் செய்ய முடியாது

நாட்டின் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கை மீன்பிடி சட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் கடற்றொழில் நீரியில்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இலங்கை மீன்பிடி சட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் திருத்தத்துக்காக போராட்டம் நடத்துவதை தவிர்த்து இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாது தமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதே சிறந்தது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் நடவடிக்கையை தடுப்பதற்காக, அதிக அபராதம் விதிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்து, இலங்கை மீன்பிடி சட்டத்தில் திருத்தம் மேறகொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பிரதமர் நரோந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிடதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன் எமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக வரும் எந்தவொரு வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர், இந்தியர்களின் சம்பிரதாயபூர்வமான மீன்பிடித் தொழிலை முன்னெடுப்பதற்கு எமது கடற் பிரதேசத்தில் இடமளிக்காது என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மட்டுவில் கொள்ளையிடும் நல்லாட்சியை சாடிய மஹிந்த!!!

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மட்டக்களப்பில் நேற்று மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி நகரசபை வேட்பாளர் ஏ.எல்.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் போன்றோர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்கள் மத்தியில் உரையாற்றுகையில்,

” இப்போது தேங்காய் விலை என்ன? அரிசி விலை என்ன? எல்லாத்தையும் உயர்த்திவிட்டார்கள் சதிகாரர்கள். இவர்கள் மக்களின் பொருளாதாரத்தை அழித்துவிட்டார்கள்.

கடந்த காலத்திலே நாங்கள் ஒன்றிணைந்து பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டோம். இந்த நாட்டிலே சுனாமி ஏற்பட்டது அதில் பல சேதங்கள், உயிரிழப்புக்கள் ஏற்பட்டது. இந்த வேளையில்தான் யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகி அந்த யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தோம்.

அந்த யுத்தம் நடைபெற்ற ஒன்பது ஆண்டு காலத்தில் நாங்கள் வயல் பிரதேசத்திற்கு செல்வதானால் இராணுவத்தின் பாதுகாப்பில்தான் சென்றுவர வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.இவ்வாறான காலகட்டத்தில்தான் இந்த யுத்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவந்தோம்.

எங்கள் ஆட்சிக் காலத்தில் நீர் வசதிகளை சீர் செய்தோம், மின்சார வசதிகளை வழங்கினோம், வீதிகளை செப்பனிட்டோம், பாலங்களை அமைத்தோம் இப்படி பல வேலைத் திட்டங்களை மேற்கொண்டோம்.

இன்று மூன்று வருடங்களாக நாட்டிலே இந்தப் பிரதேசம் மட்டுமல்ல முழுப் பிரதேசமும் ஒரு அபிவிருத்தி இல்லாத பிரதேசமாக மந்தகதியிலே தடுமாற்றத்துடன் காணப்படுகின்றது.

உலக நாட்டிலே பாரியளவு வங்கிக் கொள்ளை இடம்பெற்றிருக்குமாக இருந்தால் அது எங்கள் இலங்கை நாட்டில் மத்திய வங்கியிலே இடம்பெற்ற கொள்ளையைத்தான் நாம் கூறவேண்டும்.

இன்று ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில்தான் ஈடுபட்டு வருகின்றது என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இவர்கள் திருடிய பணத்திற்கு நீங்கள் எல்லாம் வட்டி கட்டி வருகின்றீர்கள், இந்தச் சம்பவத்தினால் பொருட்களின் விலை உயர்ந்திருக்கின்றது என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன் பிணைமுறி மோசடி அறிக்கை மீது பாராளுமன்ற விவாதத்தை நடத்த கோரிக்கை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிணைமுறி மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பான அறிக்கை ஆகியன தொடர்பில் பாராளுமன்ற விவாதத்தை நடத்துவதற்காக விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்றை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அவர் எழுத்து மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அவிஸ்ஸாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக அந்த அறிக்கைகள் சம்பந்தமான பாராளுமன்ற விவாதத்தை நடத்துவதற்காக விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு சபாநாயகரிடம் அநுரகுமார திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முடிந்தால் தேர்தலுக்கு முன்னர் அந்த அறிக்கைகள் சம்பந்தமாக விவாதம் நடத்திக் காட்டுமாறு அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்த கருத்துக்கு அமைவாகவே இந்த எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்பட்டதாக அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*