;
Athirady Tamil News

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என அஸ்மீனை தெளிவுபடுத்தினார் மௌலவி சுபியான்..!!

0

வடமாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினினால் அண்மையில் திகதியிடப்படாத பிரசுரம் ஒன்றினை யாழ் முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத்திட்டம் உண்மைகளும் பொய்களும் எனும் தலைப்பில் வெளியிட்டிருந்ததாகவும் அப்பிரசுரம் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது போன்று யாழ்மாவட்ட முஸ்லிம்களின் வீட்டுத்திட்டம் தொடர்பாக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க எடுத்த முயற்சியே தவிர வேறொன்றுமில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் மீள்குடியேற்ற இணைப்பாளர். மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான் மௌலவி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

2017ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப் -படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டமானது கௌரவ அமைச்சர் ரிஷாத்பதியுத்தீனின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியின் பிரதிபலிப்பாகு -மென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தனது தலைமையில் வடமாகாண முஸ்லிம்களின் துரிதமான மீள்குடியேற்றத் -திற்காக ஆலோசனை சபை ஒன்றை உருவாக்கினார். அச் சபையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லீம் மக்களின் பிரதிநிதியாக என்னை இணைந்து செயற்படுமாறு அமைச்சர் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.

இச் சபையானது வடமாகாணம் தழுவிய தேவை மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரித்தது இச் சபையின் ஆலோசனைக்கமைவாக ‘நீண்ட கால இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான வடக்கு செயலணிக்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டது. இது 2016 ஒக்டோபர் மாதத்தில் அமைச்சரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இச் செயலணியானது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவலக அமைச்சின் கீழ் ஒரு பிரிவாக செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இச் செயலணி நடைமுறைக்கு வந்த வருடமே (2016) முஸ்லிம்களுக்காக யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 200 வீடுகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 100 வீடுகளுக்குமான நிதி ஒதுக்கீடுகளுக்கான கடிதங்கள் இரண்டு மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டது. எனினும் வருடம் முடிவதற்கு குறுகியகாலம் இருப்பதினால் இத்திட்டம் 2017ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

இத்திட்டத்திற்காக வந்த கடிதத்திற்கு யாழ். மாவட்ட செயலகத்தினால் பயனாளிகள் பட்டியல் வடக்கு செயலணிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் யாழ்மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வேலணை ஆகிய மூன்று பிரதேச செயலகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 69 முஸ்லிம்களினது பெயரும் ஏனைய 131 முஸ்லிம் அல்லாதவர்களின் பெயர்களும்; இருந்தது. எனவே இச் செயலணி முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டதினால் செயலணியானது 69 வீடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கியிருந்தது. இத்திட்டத்தின் நடைமுறையானது ‘சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற இந்துமத அலுவலக அமைச்சின் சுற்றறிக்கையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

2015 – 2016 காலகட்டத்தில் மீள் குடியேற்ற அமைச்சினால் யாழ்மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதன் போது பயனாளிகள் தெரிவு செய்து வீட்டுத்திட்டம் வழங்கும்போது எவ்விதமான இறுக்கமான நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்த காணியுள்ளவர்களுக்கு அவர்கள் இங்கு வசித்திராவிட்டாலும் அவர்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெற்றால் இங்கு வசிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் வீட்டுத்திட்ட உதவி வழங்கப்பட்டன.

ஆனால் வீட்டு வேலைகள் முடிவடைந்ததன் பின்னர் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டைப் பூட்டி விட்டு அல்லது வேறு நபர்களுக்கு வாடகைக்கு கொடுத்துவிட்டு அவர்கள் தங்களது இடம் பெயர்ந்து வாழ்ந்த பழைய இடங்களுக்கே சென்றுவிட்டனர். இது நிர்வாக மட்டத்தில் அரச உத்தியோகத்தருக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியிருந்தது.

வடக்கு மீள் குடியேற்ற செயலணியின் வீட்டுத்திட்டம் வந்த பொழுது அதனை நடைமுறைப்படுத்தும்போது அரச நிர்வாகிகள் சற்று இறுக்கமான நடைமுறைகளை கையாளத் தொடங்கினர். எனினும் இவ்விடயங்கள் தொடர்பாக எமக்கும் யாழ் மாவட்ட செயலகம், யாழ் பிரதேச செயலகம், மற்றும் அமைச்சு அதிகாரிகளிடையே சுமுகமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று மீள்குடியேற்றத்திட்ட நடைமுறைகளை இலகுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்துகொண்டிருக்கும்போது வடமாகாணசபை உறுப்பினரின் தேவையற்ற அரசியல் தலையீடுகள் காரணமாக இவ்விவகாரங்கள் மேலும் இறுக ஆரம்பித்தது.

இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியதுடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதங்களும் ஏற்பட்டது. ஆனால் இதனை இவர் தனது அரசியல் வளர்ச்சிக்காக வேண்டி ‘இயக்கம்’ என்றும் ‘போராட்டம்’ என்றும் மக்களை அரச நிர்வாகத்திற்கு எதிராக உசிப்பிவிட்டு தேவையற்ற முறையில் பிரச்சினைகளை சூடேற்றி அதில் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.

‘ஒதுக்கப்பட்ட 200 வீடுகளையும் 2017 டிசம்பருக்குள் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ என்ற கோஷத்தை எவ்வித அடிப்படை உண்மைகளையும் விளங்காத நிலையில் முன்வைத்து தானும் குழம்பி ஊரையும் குழப்பும் முயற்சியில் இவர் இறங்கினார்.

இந்த வீட்டுத்திட்டத்தில் இவர் தலையீடு செய்யாமலிருந்திருந்தால் அரசியல் சூழ்ச்சிகளிலும் இவர் ஈடுபடாமலிருந்திருந்தால் அரச நிர்வாக ரீதியாக எதிர்நோக்கிய பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு வீட்டுத்திட்ட நடை -முறைகள் சீராகச் சென்று இருக்கும். இவரின் செயற்பாடு ஒவ்வொன்றினையும் அவதானிக்கும் போது தனக்கே எல்லாம் தெரியும் என்று தேவையற்ற முறையில் சம்பந்தமில்லாமலும் அழைக்கப்படாமலுமே தனது மூக்கினை எல்லாவற்றிலும் நுழைத்து தானும் நாறி சமூகத்தையும் நாற்றப்படுத்திவிட்டுச் செல்வதே இவரது வழமையாகி விட்டது. இவற்றில் ஒன்று தான் வடக்கு செயலணியின் இவ்வீட்டுத் திட்டமாகும்.

இங்கு நாம் வடமாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினிடம் முன்வைக்கும் கேள்வியானது மாகாண சபையின் மூலம் எத்தனை வீடுகளை யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு பெற்றுத் தந்தீர்கள் என்பதேயாகும். ? வடமாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்திலுள்ள சபையாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2004ல் புலிகளினால் உருவாக்கப்பட்ட கட்சியாகும்.

புலிகளினால் வர்ணிக்க முடியாத கொடுமைகளையும் அழிவுகளையும் சந்தித்தவர்கள் யாழ். முஸ்லிம்கள். இம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கும் மறு வாழ்விற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கியது என்ன? வெறுமனே தேர்தல் விஞ்ஞாபணங்களிலும், பத்திரிகை அறிக்கை -யிலும்தான் முஸ்லிம்கள் மீதான அனுதாபங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளதே தவிர முஸ்லிம்களின் மீது உண்மையில் எவ்வித அக்கறையும் இல்லை. இருவருக்கு பட்டியலில் அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டதையும் உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்த நிதியிலிருந்து செய்யப்பட்ட வேலை -களையும் இவர்கள் கூறுவார்களெனில் யாழ் முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் யானைப் பசிக்கு சோலப்பொரி வழங்கியதற்கு ஒப்பாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தனக்கு வாக்களித்த தமிழ் மக்களையே திருப்திப்படுத்த முடியாத நிலையில் அவதியுற்றுக் கொண்டிருக்கும்போது முஸ்லிம் மக்கள் இவர்களிடம் எதிர்பார்ப்பது முடவனிடம் தேனுக்கு ஆசைப்பட்டவன் மாதிரித்தான் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

வடக்கு மீள்குடியேற்ற செயலணி தனது பணியை ஆரம்பித்த பொழுது வடமாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஏகோபித்து அதற்கு எதிராக குரல் கொடுத்து எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியதை இன்னும் வடமாகாண குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் மறந்து விடவில்லை. எனவே மத்திய அரசின் வடக்கு மீள்குடியேற்ற செயலணியால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தையும் மற்றும் அபிவிருத்திகளையும் சீர் குழைப்பதே இவரினதும் இவரினால் பிழையாக வழிநடத்தப்படும் சகாக்களின் நோக்கமே தவிர வேறொன்றுமில்லை.

எனவே மக்களை விழிப்பாக இருக்குமாறும் நன்கு சிந்தித்து செயல்படுமாறும் கேட்டுக் கொள்கின்றேன். எனது எல்லா வேலைத்திட்டங்களுக்கும் ஆதாரம் என்னிடம் உண்டு. தேவையுள்ளவர்கள் நேரில் வந்து பார்த்துக் கொள்ளமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*