;
Athirady Tamil News

நித்திரவிளை அருகே ஆற்றில் பிணமாக மிதந்த தாய்- 2 குழந்தைகள் மரணத்தில் மர்மம் நீடிப்பு..!!

0

கருங்கலை அடுத்த மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின்.

இவரது மகள் பேபி சாலினி என்ற சங்கீதா (வயது 27). இவரது கணவர் வள்ளவிளை ததேயூபுரத்தை சேர்ந்த விஜயதாசன். மீனவரான இவர் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார். இவர்களுக்கு சஞ்சய் (7), பியுபோபர் (5) என்ற 2 மகன்களும் இருந்தனர்.

பேபி சாலினி- விஜயதாசன் இடையே 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பேபி சாலினி தனது 2 மகன்களுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் கணவர் விஜயதாசன், மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை சமரசம் செய்து தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்து சென்றார்.

அதன்பின்பு பேபி சாலினியும், குழந்தைகளும் நித்திரவிளை அருகே காஞ்சாம்புரத்தில் வீடு வாடகைக்கு எடுத்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு தான் விஜயதாசன் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றார். அதன்பின்பு பேபி சாலினியும், அவரது குழந்தைகளும் காஞ்சாம்புரத்தில் தனியாக வசித்து வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு பேபிசாலினியை அவரது தந்தை மார்ட்டின் செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மார்ட்டின் மகளை தேடி காஞ்சாம்புரம் வந்தார். அப்போது தான் பேபிசாலினியும், அவரது 2 குழந்தைகளும் 2 நாட்களுக்கு முன்பே மாயமாகி இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார்.

மார்ட்டின் நித்திரவிளை போலீஸ் நிலையம் சென்றபோது, அங்கு கணபதியான்கடவு பகுதியில் உள்ள ஆற்றில் ஒரு இளம்பெண்ணும், 2 குழந்தைகளும் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் மார்ட்டினை தங்களுடன் அழைத்து கொண்டு கணபதியான்கடவுக்கு சென்றனர்.

அங்கு போனபின்புதான் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் மார்ட்டினின் மகளும், பேரன்களும் என தெரியவந்தது.

போலீசார் பேபிசாலினியின் பிணத்தை மீட்டபோது அவரது முகம் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு இருந்தது. ஆனால் அவரது குழந்தைகள் உடலில் அப்படி எந்த தடயமும் இல்லை. அதே நேரம் பேபிசாலினியின் கால்கள் கட்டப்படவில்லை.

இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பேபிசாலினி அவராக ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்து இருந்தால் சில மணி நேரமாவது ஆற்றில் மூழ்கி தவித்து இருப்பார். அவரது குழந்தைகளும் அழுது குரல் எழுப்பி இருக்கும். ஆனால் இத்தகைய சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இது பேபி சாலினி மற்றும் அவரது குழந்தைகள் சாவில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து குளச்சல் ஏ.எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது பிணம் கிடந்த பகுதியில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது. வழியில் ஒரு கிளினிக் மற்றும் பேபிசாலினியின் வீட்டுக்கும் சென்று வந்தது. போலீசார் மோப்ப நாய் துப்பு கொடுத்த பகுதிகளுக்கு சென்று விசாரித்தனர்.

மேலும் பேபிசாலினியின் செல்போனையும் கைப்பற்றி அதில் கடந்த 2 நாட்களில் அவருக்கு வந்த அழைப்புகள், பேபி சாலினி தொடர்பு கொண்டு பேசிய நபர்கள் பட்டியலை திரட்டினர்.

இதில் பேபி சாலினி அப்பகுதியில் உள்ள ஒரு டாக்டர் மற்றும் 2 பேருடன் அடிக்கடி பேசிஇருப்பதும், அவர்களும் பேபி சாலினியை தொடர்பு கொண்டதும் தெரியவந்தது.

பேபி சாலினி பேசி இருக்கும் டாக்டர், அப்பகுதியில் கிளினிக் வைத்துள்ளார். இவருக்கு கேரளாவிலும் கிளினிக் உள்ளது. இவர்தான் பேபி சாலினிக்கு உடல்நலக்குறைவு ஏற்படும்போதெல்லாம் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

இதுபோல மேலும் 2 வாலிபர்களும் பேபி சாலினியுடன் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இவர்கள் 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே பேபி சாலினி மற்றும் அவரது குழந்தைகள் ஆகியோரின் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதில் ஏதாவது முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் கருதுகிறார்கள். அந்த தகவல் மூலம் தாய்- 2 மகன்களின் சாவில் நீடிக்கும் மர்மத்தை கண்டுபிடித்து விடலாம் என போலீசார் நம்பிக்கையுடன் உள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிந்த பின்பே பேபி சாலினியும் அவரது குழந்தைகளும் ஆற்றில் வீசப்படும் முன்பே இறந்திருந்தார்களா? என்பது தெரியவரும்.

பேபி சாலினியும் இறப்பதற்கு முன்பு உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா? என்பதும் பிரேத பரிசோதனை மூலம் கண்டு பிடித்துவிடலாம். எனவே பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.

மேலும் கடலுக்கு சென்ற பேபி சாலினியின் கணவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கரை திரும்பிய பின்பு அவரிடமும் போலீ சார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். அப்போது இருவரும் பிரிந்திருந்ததற்கான காரணம் பற்றியும் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*