;
Athirady Tamil News

த. தே. கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது தென்னிலங்கை பேரினவாத சக்திகளின் கரங்களை வலுப்படுத்துவதாகவே அமையும்…!!

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது தென்னிலங்கை பேரினவாத சக்திகளின் கரங்களை வலுப்படுத்துவதாகவே அமையும்: சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது என்பதும் அதற்காக வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்பது என்பதும் தென்னிலங்கை பேரினவாத சக்திகளின் கரங்களை வலுப்படுத்துவதாகவே அமையும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் கனுக்கேணி வட்டாரம் முறிப்பு கிராமத்தில் நேற்று இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்திலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரத்தைச் சூறையாடியதுடன் யுத்தத்தில் பல்வேறு வளங்களையும் இழந்த எம்மீது பொருளாதாரச்சுமையை ஏற்றுகின்ற அரசாங்கத்தைக் காப்பதற்காக வரவு-செலவுத் திட்டத்தை ஆதரித்து அதற்கு சன்மானமாக இரண்டுகோடி நிதியையும் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெற்றுக்கொண்டு இன்று சாரைப்பாம்பின்மீது மண்ணெண்ணெய்
ஊற்றியது போல் நெளிகின்றனர்.

இந்த ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை எதிர்க்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். ஊடகங்களும் யார் யார் அவ்வாறு எதிர்க்கப்போகிறார்கள் என்பதைக்கூட தெரிவித்திருந்தன.

வாக்கெடுப்பு தினத்தன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு கூடுகிறது. அப்போது சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மீது கட்சி எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை நாம் இந்த வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்க முடியாது என்று
தெரிவிக்கின்றனர். நாம் கேட்ட எந்த விடயத்தையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை. எந்த முகத்துடன் நாம் மக்களைச் சந்திப்பது என்று கேள்வி எழுப்புகின்றனர். சற்று நேரத்தில் பிரதமர் ரணிலுடன் ஒரு சந்திப்பு நடக்கிறது. மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற
உறுப்பினர்களில் நான் ஒருவனைத் தவிர ஏனைய அனைவரும் ஆதரவாக வாக்களிக்கின்றனர். அதன் பின்னர் நான் பாராளுமன்றத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் இரண்டுகோடி ரூபாய் பெற்றுக்கொண்டு ஒருமோசமான வரவு-செலவுத் திட்டத்திற்கு கூட்டமைப்பினரும் ஆதரவளித்துள்ளனர் என்று தெரிவித்தேன்.

நான் அன்று கூறியது உண்மை என்பதை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துவரும் கருத்துக்கள் நிரூபிக்கின்றன. தற்போது சிலர் வாங்கினேன் என்றும் சிலர் வாங்கவில்லை என்றும் சிலர் நிரூபிக்க முடியுமா என்றும் கேள்விகள் கேட்கின்றனர். ஒருசிலர் புள்ளிவிபரம் கொடுக்கின்றேன் என்ற பெயரில் தங்களது எடுபிடிகளை வைத்து தவறான புள்ளிவிபரங்களையும் கொடுத்துள்ளனர். அன்று காலைவரை வரவு-செலவுத்திட்டத்தை கடுமையாக விமர்சித்ததுடன், இந்த அரசாங்கம் நாம் வழங்குகின்ற நிபந்தனையற்ற ஆதரவிற்கு எள்ளளவும் தனது நல்லிணக்கத்தைக் காட்டவில்லை என்று தெரிவித்து கொள்கையளவில் சரியாக இருந்தவர்கள் திடீரென்று எப்படி மாறினார்கள் என்பதுதான் எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வரவு-செலவுத் திட்டத்தின்மீதான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நேரத்தில் அந்தத் தொகை எதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது எனது அடுத்த கேள்வி. பெற்றுக்கொண்ட தொகையை அவர்கள் தங்களது ஆதரவுத்தளத்தை உறுதிசெய்து கொள்வதற்காகப் பயன்படுத்தியிருப்பது இந்தத் தொகை தேர்தலுக்காகவே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிறது. இதனைத்தான் நான் அரசியல் இலஞ்சம் என்று குறிப்பிட்டேன். அதியுச்சமாக பதினைந்து இலட்சம் ரூபாய்தான் செலவு செய்ய முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். அப்படியாயின் ஒரு
பாராளுமன்ற உறுப்பினர் மூன்று பாடசாலைகளுக்கு மூன்று மாடிக் கட்டடம் கட்டுவதற்கும் ஏனைய விடயங்களுக்கும் இந்த நிதியை ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றியே வரவு-செலவு திட்டம் நிறைவேறக்கூடிய சாத்தியம் இருக்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறுவதற்கு எமது ஆதரவு தேவையெனில் குறைந்தபட்சம் அரசியல் கைதிகளின் விடுதலையையாவது முன்வைத்திருக்கலாமே அல்லது முதலமைச்சர் நிதியத்திற்கு ஒப்புதல் வாங்கியிருக்கலாமே என்பதுதான் எம்முடைய கேள்வி.

ஆகவே, நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கம் நாம் காண்பித்த நல்லிணக்க சமிக்ஞைகள் எதற்கும் சாதகமான பதிலைச் சொல்லாமல் இருக்கையில் நாம் மட்டும் எதற்காக இந்த அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டும்? இந்த அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்திற்கு நாம் ஏன் ஆதரவளிக்க வேண்டும்? ஒற்றுமையைக் காக்க வேண்டும் என்ற போர்வையிலும் நிலையான அபிவிருத்தி என்ற
போர்வையிலும் வாக்குக் கேட்டு வருபவர்களிடம் நீங்கள் இந்தக் கேள்விகளைக்கேட்க வேண்டும்.

இந்த நிதி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்ற நிதி என்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே கருத்துத் தெரிவித்துள்ளார். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது என்பதும் அதற்காக வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்பது என்பதும் தென்னிலங்கை பேரினவாத சக்திகளின் கரங்களை வலுப்படுத்துவதாகவே அமையும். எம்மவர்கள் செய்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் அவர்களை எமது உரிமைகள் சார்ந்து திசைதிருப்புவதற்கும் நாம் இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் கொள்கை தொடர்பாக எழுப்புகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கடந்தகால சம்பவங்களைத் திரிபுபடுத்தி எம்மீது சேறுபூச முயற்சிக்கின்றனர். விடுதலைப் புலிகளினால் முதலீட்டிற்காக வழங்கப்பட்ட நிதியுதவியைக் கொண்டு எரிபொருள் நிரப்புநிலையம், வணிக நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கி கொள்ளை இலாபம் ஈட்டி அரசியலுக்கு வந்தவர்கள் எம்மீது சேறுபூச நினைப்பது வேடிக்கையாக உள்ளது. தாங்கள் ஈட்டிய இலாபத்திலிருந்து ஒரு சிறு தொகையையாவது இவர்கள் யுத்தத்தினால் அங்கவீனமடைந்த போராளிகளுக்கு செலவிட்டிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால் இவர்கள் ஏதோ பரம்பரை பணக்காரர்கள் போலவும் உத்தமர் போலவும் வேடமிட்டு எம்மீது சேறுபூசுவதாக நினைத்து தமது மரியாதையை தாமே குறைத்துக் கொள்கின்றனர். எமது மக்கள் நடப்பவை அனைத்தும் தெரியும் அவர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவினை எடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − 4 =

*