;
Athirady Tamil News

பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை…!!

0

பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (29) இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த விசேட கூட்டத்தில் வழக்குத் தொடருதல் மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து சட்ட மா அதிபர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் விரிவாக தெளிவுபடுத்தினர்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான புதிய சட்டங்களை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான வரைபுகளை ஆக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஹெல உருமய கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*