நல்லாட்சி மாற்றத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பல மில்லியன் ரூபா பணம் பரிமாறப்பட்டுள்ளது…!!

நல்லாட்சி மாற்றத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பல மில்லியன் ரூபா பணம் பரிமாறப்பட்டுள்ளது. எம்.பி.சிவசக்தி ஆனந்தன் அதிர்ச்சி தகவல்.
வவுனியா பண்டாரிக்குளத்தில் வட்டாரம் மூன்றில் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு சார்பாக உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ரி. மகேந்திரராஜவின் தேர்தல் அலுவலகத்தை நேற்று (29) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று வருடங்கள் நிறைவுபெறும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களின் போராட்டம் ஒரு வருடத்தை எட்டவுள்ள நிலையில் இவர்களுக்கு பதிலளிக்க முடியாத தலைவராக சம்பந்தன் ஐயா இருக்கிறார்.
ஆரசியல் கைதிகள் விவகாரம் மற்றும் கேப்பாப்புலவு மண்மீட்பு போராட்டங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் மீது இருந்த போர் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள், இலங்கை அரசாங்கம் ஐநாவுக்கு வழங்கிய வாக்குறுதிகள் போன்றவற்றில் எதிர்க்கட்சி தலைவர் காத்திரமாக செயற்படவில்லை என தெரிவித்தார்.
இலங்கையின் முப்படையினரையும் போர்க்குற்ற விசாரணைகளிருந்து காப்பாற்ற காலநீடிப்புக்கு தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.
அரசியல் வழிநடத்தல் குழுவில் கடந்த ஒரு வருட காலமாக சமஸ்டியைப்பற்றியோ, காணி பொலிஸ் அதிகாரங்கள் பற்றியோ எதுவுமே பேசாமல் வாய்மூடி மௌனிகளா இருந்து விட்டு இன்று ஒன்றுமே இல்லாத இடைக்கால அறிக்கைக்கு உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஆணை வழங்குமாறு தமிழரவுக் கட்சியினர் கேட்கிறார்கள்.
தமிழரசுக்கட்சிக்குள்சர்வதிகாரம் மேலோங்கி காணப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படவில்லை. பல மில்லியன் ரூபா பணம் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளது அத்துடன் ஆட்சி மாற்றத்தின் போது பல மில்லியன் ரூபாய்கள் கூட்டமைப்பினருக்கு பரிமாறப்பட்டுள்ளது.
இதை கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தனோ, சுமந்திரனோ மறுப்பார்களா? என கேள்வியெழுப்பினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இரண்டு கோடி ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு பாதுகாப்புக்கென அரசின் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் பில்லலியன் ரூபாக்கள் நிதியை ஏன் என கேள்வி கேட்காது வாக்களித்துள்ளனர். என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா