;
Athirady Tamil News

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் ரஷியா தலையிட முயற்சிக்கும்: உளவு அமைப்பு தலைவர் பேட்டி..!!

0

அமெரிக்காவின் உளவு அமைப்பு சி.ஐ.ஏ., ஆகும். அதன் தலைவரான மைக் போம்பியோ பி.பி.சி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், “மேற்கத்திய நாடுகள் மீது சீனா ரகசிய செல்வாக்கை செலுத்துவதற்கு முயற்சிக்கிறது. அந்த வகையில் ரஷியாவைப் போன்று சீனாவும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக அமைந்து உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ரஷியர்களை விட சீனாவுக்கு மிகப்பெரிய தடம் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

மேற்கத்திய நாடுகள் மீது சீனா செலுத்த முயற்சிக்கிற ரகசிய செல்வாக்குக்கு எதிராக, மற்ற நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “அமெரிக்க தகவல்களை திருடுவதற்கு நடக்கிற முயற்சியை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். உளவாளிகளுடன் அமெரிக்காவினுள் நுழையவும் முயற்சி நடக்கிறது. பள்ளிக்கூடங்களில், மருத்துவமனைகளில், மருத்துவ அமைப்புகளில் இதை நாங்கள் பார்க்கிறோம். ஐரோப்பா மற்றும் இங்கிலாந்திலும் கூட இதைப் பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் நேரடி தலையீடு இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதை அந்த நாட்டின் உளவு அமைப்புகள் அனைத்தும் நம்புகின்றன.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் முன்னாள் தலைவர் ராபர்ட் முல்லர் தலைமையிலான குழுவும் விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 6-ந் தேதி நாடாளுமன்ற இடைக் கால தேர்தல் நடக்க உள்ளது. அப்போது கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையின் 100 இடங்களில் 33 இடங்களுக்கும் தேர்தல்கள் நடக்கும்.

இந்த தேர்தலிலும் ரஷியா தலையிடுவதற்கு முயற்சிக்கும் என்று சி.ஐ.ஏ.யின் தலைவர் மைக் போம்பியோ எச்சரித்து உள்ளார்.

அதே நேரத்தில், “அதைத் தடுக்கிற ஆற்றல் அமெரிக்காவுக்கு உண்டு. நியாயமாகவும், சுதந்திரமாகவும் தேர்தல்களை நடத்துவோம். இந்த தேர்தலில் அவர்களின் தாக்கம் பெரிய அளவில் இல்லாத வகையில் பார்த்துக்கொள்வோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து இதுபற்றி மைக் போம்பியோ குறிப்பிடுகையில், “ரஷியாவின் கவிழ்ப்பு முயற்சிகளை முறியடிக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. இதில் சில பணிகள் சி.ஐ.ஏ.யின் வேலை அல்ல என்றபோதும், இந்த கவிழ்ப்பு முயற்சியின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறியும் வேலையில் உளவு அமைப்புகள் ஈடுபட்டு உள்ளோம். ரஷியாவின் முயற்சியைத் தடுப்பதற்கு தொழில் நுட்ப ரீதியில் முயன்று கொண்டு இருக்கிறோம்” என்று கூறினார்.

அமெரிக்காவில் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மைக்கேல் வோல்ப் எழுதிய ‘பயர் அண்ட் பியுரி: இன்சைடு தி டிரம்ப் ஒயிட் ஹவுஸ்’ (‘நெருப்பும், சீற்றமும்: டிரம்பின் வெள்ளை மாளிகையின் உள்ளே’) புத்தகம் பற்றியும் மைக் போம்பியோ குறிப்பிடத்தவறவில்லை.

இந்தப் புத்தகத்தில் டிரம்பை வழிநடத்துகிறவர்கள் பற்றி குறிப்பிட்டிருப்பது அபத்தமானது, நான் அந்தப் புத்தகத்தை வாசிக்கவில்லை. அதை வாசிக்கிற எண்ணமும் எனக்கு இல்லை என அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 16 =

*