;
Athirady Tamil News

பா.ஜ.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் அதிருப்தி – பாராளுமன்ற தேர்தலில் சிக்கல் ஏற்படுமா?..!!

0

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி அலை ஒரு பக்கம் இருக்க, அவர் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைத்திருந்த வலுவான கூட்டணியும் பாரதிய ஜனதா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால், அதே நிலை 2019 பாராளுமன்ற தேர்தலிலும் நீடிக்குமா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஏனென்றால், கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்த பல கட்சிகள் இப்போது எதிராக திரும்பி வருகின்றன.

பாரதிய ஜனதாவின் மிக முக்கிய கூட்டணி கட்சியான சிவசேனா, பாரதிய ஜனதாவுடன் இருந்த கூட்டணியை முறித்து கொண்டுள்ளது. இனி வரும் அனைத்து தேர்தலிலும் தனித்து போட்டியிட போவதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.

அதே போல் கூட்டணியின் மற்றொரு முக்கிய கட்சியான தெலுங்கு தேசமும் தற்போது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

சமீபத்தில் இதுபற்றி பேட்டி அளித்த கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பாரதிய ஜனதா, கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை. அவர்கள் எங்களுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை என்றால் அதன்படி நடந்து கொள்ளட்டும் என்று வெளிப்படையாகவே பேசினார்.

அதாவது பாரதிய ஜனதாவுடன் இனி கூட்டணி இல்லை என்பது போல் அவரது கருத்துக்கள் இருந்தன.

சமீப காலமாக உள்ளூர் பாரதிய ஜனதா தலைவர்கள் தெலுங்கு தேசத்துக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை கட்சி மேலிடம் கட்டுப்படுத்தவில்லை.

அதே நேரத்தில் தெலுங்கு தேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுடன் பாரதிய ஜனதா அதிக நெருக்கம் காட்டி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்துடன் பாரதிய ஜனதா செயல்படுவதாக சந்திரபாபு நாயுடு கருதுகிறார்.

அது மட்டும் அல்ல, ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதை அடுத்து ஆந்திராவுக்கு பல்வேறு உதவிகளை செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்திருந்தது.

ஆனால், அதன்படி உதவிகளை செய்யவில்லை. குறிப்பாக உரிய நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால் மாநில அரசு பல்வேறு சிக்கலில் தவிக்கிறது. இதுவும் பாரதிய ஜனதா மீது சந்திரபாபு நாயுடுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் தனது அதிருப்தியை வெளிக்காட்டினால் தான் காரியம் சாதிக்க முடியும் என்று சந்திரபாபு நாயுடு கருதுகிறார்.

அதற்கு இறங்கி வந்தால் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி நீடிப்பது, அல்லது கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார்.

இதேபோல் பல மாநிலங்களிலும் கூட்டணி கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு எதிராக முணுமுணுக்க தொடங்கி உள்ளது.

பீகாரில் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி, முன்னாள் முதல்-மந்திரி மாஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வருகின்றன.

அவர்களும் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த கட்சிகள் லல்லுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கை கோர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி மனித சங்கிலி இயக்கம் ஒன்றை நடத்தியது. இதில், பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எனவே, அந்த கட்சி பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவது உறுதியாகி விட்டது.

பாரதிய ஜனதா கட்சி பல மாநிலங்களில் வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தாலும், அந்த கட்சிகளை புறந்தள்ளி விட்டு தங்கள் கட்சிகளை வளர்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறது.

உள்ளூர் தலைவர்கள் கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வதில்லை. கூட்டணி கட்சிகள் விடுக்கும் கோரிக்கைகளையும் பாரதிய ஜனதா காதில் வாங்கிக் கொள்வதில்லை.

எனவேதான் பல மாநிலங்களிலும் கூட்டணி கட்சிகள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றன.

விரைவில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது என்றே கருதப்படுகிறது.

குறிப்பாக ராஜஸ்தானில் பாரதிய ஜனதா வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்று தெரிய வந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் இந்த மாநிலங்கள் பாரதிய ஜனதாவுக்கு பெரிய அளவில் கைகொடுத்தன. ஆனால், வருகிற சட்டசபை தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டால் அது, பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.

எனவே, கடந்த தேர்தல் வெற்றி போல் 2019 பாராளுமன்ற தேர்தல் பாரதிய ஜனதாவுக்கு அமையாது என்றே கூறப்படுகிறது.

பாரதிய ஜனதாவின் வெற்றி உறுதி செய்யப்படாத நிலையில் இருப்பதால் கூட்டணி கட்சிகளும் அதில் இருந்து விலகி தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி கொள்ள தயாராகி வருகின்றன.

இதில், பாரதிய ஜனதா எந்த மாதிரி முடிவுகள் எடுத்து கூட்டணி கட்சிகளை தக்கவைக்க போகிறது? என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + seven =

*