;
Athirady Tamil News

காவிரி நதிநீர் தீர்ப்பு 5-ந்தேதி வெளியாகிறது – கர்நாடகாவில் பாதுகாப்பு அதிகரிப்பு..!!

0

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் தற்போது சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை காலம் நெருங்கும் நிலையில் சம்பா பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரியில் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து போனதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சம்பா சாகுபடி பயிரிடப் பட்டிருந்த போது வடகிழக்கு பருவ மழை தீவிரம் காரணமாக பயிர்கள் அழிந்தன. இந்த நிலையில் மீண்டும் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்டா மாவட்ட சம்பா பயிரைக் காப்பாற்ற 15 டி.எம்.சி. காவிரி நீரை திறந்து விடுமாறு கர்நாடகா அரசை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வருகிறார். ஆனால் கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமைய்யா தண்ணீர் தரமறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து பேச முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே காவிரி நதிநீரை பிரித்துக் கொள்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. 2007-ம் ஆண்டு காவிரி நீர் நடுவர் மன்றம் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 419 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு செய்தன.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த அப்பீல் வழக்கு நடந்து வருகிறது. இரு மாநில வக்கீல்கள் வாதம் முடிந்து விட்டது. எனவே காவிரி நீர் பங்கீடு வழக்கில் வரும் 5-ந்தேதி இறுதித் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.

காவிரி நதிநீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு எப்போது உத்தரவுகள் வெளியிட்டாலும் கர்நாடகாவில் வன்முறை நடத்தப்படுகிறது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. 2007-ல் கலவரம் ஏற்பட்ட போது ரூ.11 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்காக பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு கர்நாடகாவில் வரும் 5-ந்தேதி வன்முறை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மாண்டியா, மைசூர் மாவட்டங்களில் அதிக பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − three =

*