;
Athirady Tamil News

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது: கர்நாடக மந்திரி..!!

0

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் இல்லாமல் வாடும் சம்பா பயிரை காப்பாற்ற நடுவர் மன்ற உத்தரவுப்படி தண்ணீரை காவிரியில் திறந்துவிடும்படி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்தித்து பேச நேரம் ஒதுக்கும்படி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

இந்நிலையில் பெங்களூருவில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி கேட்டு உள்ளார். அவரை சந்திப்பது குறித்து, முதல்-மந்திரி சித்தராமையா தான் முடிவு எடுப்பார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளில் போதிய தண்ணீர் இல்லை. அணைகளில் இருப்புள்ள தண்ணீரை ஜூன் மாதம் வரை பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீருக்கு பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. அணைகளில் உள்ள தண்ணீர் குடிநீருக்கே போதுமானதாக உள்ளது. எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது என்பது சாத்தியமில்லை.

தமிழக முதலமைச்சர், பெங்களூருவுக்கு வரும்போது அவரிடம் காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை பற்றியும், இங்கு நிலவும் சூழ்நிலை பற்றியும் தெளிவாக எடுத்து கூறப்படும். அதன்பிறகு, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதா?, வேண்டாமா? என்பது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா இறுதி முடிவு எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*