;
Athirady Tamil News

பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகை..!!

0

கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா மாற்றத்துக்கான பயணம் என்ற பெயரில் கர்நாடக மாநிலம் முழுவதும் பிரசார ரதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த பிரசார பயணத்திற்கான பொதுக்கூட்டம் நாளை (4-ந்தேதி) மாலை பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

மகதாயி நதி நீர் பிரச்சனைக்கு பிரதமர் மோடி தீர்வு காண வலியுறுத்தி பெங்களூரு நகரில் நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்து உள்ளன. இந்த போராட்டத்துக்கு பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும்,பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவருமான ஜெகதீஷ் ஷெட்டர் கூறி இருந்தார். இந்த முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ்பெற வேண்டும் என்று அவர் விடுத்த அழைப்பை கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் மறுத்து விட்டார். நாளை திட்டமிட்டபடி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்து விட்டார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்து உள்ளது. கன்னட அமைப்புகளின் போராட்டத்தில் காங்கிரசுக்கு தொடர்பு இல்லை என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கூறி உள்ளார். இது குறித்து அவர் பெலகாவியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு வரும் பிரதமர் மோடி மகதாயி விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்க வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூரு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளன. இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. இந்த போராட்டத்தில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை.

ராகுல்காந்தி பெங்களூரு வரும் போது முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் கூறி உள்ளனர். அது அவர்களது விருப்பம். யார் வந்தாலும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி யார் வந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மாநில அரசு செய்யும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + twelve =

*