;
Athirady Tamil News

கோயம்பேட்டில் இருந்து மெட்ரோ ரெயில் திட்டம் பூந்தமல்லி வரை நீட்டிக்கப்படுகிறது..!!

0

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமை அடைகிறது. இரண்டாவது கட்ட திட்டத்தில் பல்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கும் மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டம் தயாரிக்கப்படுகிறது.

2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 107.55 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. 5 வழித்தடங்களில் நிறைவேற்றப்படும் இத்திட்டம் ஒரு வழித்தடம் பூந்தமல்லி பஸ் டெப்போ வரை நீட்டிப்பு செய்வதாகும். கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

பூந்தமல்லியில் இருந்து சென்னை நகருக்குள் வருவதற்கு குறைந்தது 45 நிமிடம் ஆகிறது. கடுமையான போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி கொள்வதால் பஸ் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

அதனால் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்ய கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன. மேலும் கோயம்பேட்டில் இருந்து போரூர், விருகம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி பூந்தமல்லி வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.3,850 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

கோயம்பேடு-பூந்தமல்லி விரிவாக்க பணி குறித்த கள ஆய்வு நடந்து வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை 3 அல்லது 4 மாதத்தில் தயாராகி வரும் என்று எதிர்பார்க்கிறோம். கோயம்பேட்டில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம் இப்போது பூந்தமல்லி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், காட்டுபாக்கம், குமணஞ்சாவடி பகுதிகளை இணைத்து பூந்தமல்லி பஸ் டெப்போ வரை மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்றனர்.

மெட்ரோ ரெயில் 2-வது திட்டத்தில் மாதவரம்- சோழிங்கநல்லூர், மாதவரம்-சிப்காட், கோயம்பேடு-கலங்கரை விளக்கம் மற்றும் கோயம்பேடு-பூந்தமல்லி ஆகியவை இடம் பெறுகின்றன. ஒவ்வொரு வழித்தடத்திற்கும் தனித்தனியாக திட்ட விவர அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 20 =

*