;
Athirady Tamil News

10 கோடி குடும்பத்துக்கு மருத்துவ திட்டம்: ரூ. 1,000 பிரீமியம் தொகையில் மத்திய-மாநில அரசுகள் பங்களிப்பு..!!

0

நிதி மந்திரி அருண்ஜெட்லி கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் 50 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்.

10 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு அளிக்கும் இது உலகின் மிகப் பெரிய திட்டம் என்றும் அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்த போது செயல்படுத்திய ‘ஒபாமா கேர்’ திட்டத்தை போன்றது என்றும் பாராட்டுகள் குவிகிறது.

இந்த திட்டம் பற்றி நிதி மந்திரி அருண்ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏழை குடும்பங்களுக்கான இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அடுத்த நிதி ஆண்டில் இருந்து நடை முறைக்கு வரும். முதலில் மருத்துவச் செலவை செய்து விட்டு பின்னர் அந்த தொகையை திரும்ப பெறும் வகையில் இது இருக்காது. முதலிலேயே இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஏனெனில் இதுதான் ஏழை-எளிய மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும் பணத்தை முதலில் செலவிட்டு பின்னர் அதனை திரும்ப பெறும் நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காப்பீட்டுத் திட்டம் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளும், தேர்வு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை பெற முடியும்.

இந்த காப்பீட்டு திட்டம் முழுமையாக அரசு நிதியில் இருந்து செயல்படுத்தப்படும். இதற்காக முதல் கட்டமாக ரூ. 2000 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. காப்பீடு செய்வோர் எண்ணிக்கை அதிகமானால் காப்பீட்டுக்கான ஆண்டு பிரீமியம் தொகை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் தொகை ஒரு குடும்பத்துக்கு ரூ. 1000 முதல் ரூ. 1,200 வரை நிர்ணயிக்கப்படும் என்றும் இந்த பிரீமியத் தொகையில் மத்திய-மாநில பங்களிப்பு இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இது மருத்துவ துறையில் புதிய திருப்புமுனை என்று நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் கே.பால் மற்றும் மருத்துவ துறையினர் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதா அரசின் தேர்தல் பிரசாரத்துக்கு கைகொடுக்கும் வகையில் இந்த மருத்துவ திட்டம் அமைந்து இருப்பதாக கருத்து நிலவுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 12 =

*