கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு..!! (வீடியோ)

கிருஷ்ணகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் சுற்றி வரும் ஒற்றையானை இன்றும் ஒருவரை மிதித்துக் கொன்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சூளகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே அழகுபாவி என்ற இடத்தில் காட்டுயானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளது. அந்த யானை தேசிய நெடுஞ்சாலை பக்கம் வராதவாறு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பத்தாகோட்டா கிராமத்தை சேர்ந்த ராஜப்பா என்பவரை, ஒற்றை யானை தூக்கி வீசி மிதித்தது. இதில் ராஜப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மற்றும் முனிகிருஷ்ணன் ஆகியோரையும் காட்டு யானை தாக்கியது.
இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், ஒற்றை யானையை சாமல்பள்ளம் நோக்கி விரட்டி விட்டனர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் சின்னாறு பகுதிக்கு திரும்பிய ஒற்றை யானை, தேவர்குட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் என்பவரை மிதித்துக்கொன்றது. விவசாயியை ஆக்ரோசமாக தாக்கியதில் யானையின் தந்தத்தின் முனை உடைந்து விழுந்தது. அதை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இரண்டு நாட்களில் அடுத்தடுத்த இருவர் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.