;
Athirady Tamil News

திருப்பத்தூர் பள்ளியில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்..!! (வீடியோ)

0

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ரெயில் நிலைய ரோட்டில் ராமகிருஷ்ணா என்ற அரசு நிதி உதவி பெறும் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியராக பாபு (வயது 56) பணியாற்றி வருகிறார். இவர் திருப்பத்தூர் தென்றல் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த 30 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்த இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பணி உயர்வு பெற்றார். இதே பள்ளியில் திருப்பத்தூர் அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த மாணவன் ஹரிகரன் பிளஸ்-1 படித்து வருகிறார்.

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளி வழக்கம்போல் இயங்கியது. காலை வேளையில் தலைமை ஆசிரியர் பாபு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாணவன் ஹரிகரன் வகுப்பறையில் இல்லாமல் காலியாக உள்ள மற்றொரு வகுப்பறையில் மேலும் 4 மாணவர்களுடன் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.

இதை கவனித்த தலைமை ஆசிரியர் அந்த வகுப்பறைக்கு சென்றார். அவரை கண்டதும் ஹரிகரனை தவிர மற்ற 4 மாணவர்களும் ஓடிவிட்டனர்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் மாணவன் ஹரிகரனிடம் வகுப்பறையில் இல்லாமல் ஏன் இங்கு நிற்கிறாய் என்று கேட்டு கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த மாணவன் ஹரிகரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலைமை ஆசிரியரின் வயிற்றில் குத்தினார்.

இதில் தலைமை ஆசிரியர் பாபு குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற ஆசிரியர்கள் மாணவனை பிடிக்க முயன்றனர். ஆனால் மாணவன் பள்ளி சுற்று சுவரை ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் தலைமை ஆசிரியர் பாபுவை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார்.

தலைமை ஆசிரியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவன் குத்திய கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பள்ளியில் பிளஸ்-1 மாணவன் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 9 =

*